பூந்தமல்லி: ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளை டிரைவர், கண்டக்டர்கள் 2 மணி நேரம் இயக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு, ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்கள் என 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பணி மனையிலிருந்து அதிகளவில் ஊழியர்கள் பணி ஓய்வுபெற்றுள்ளனர். இதனால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பேருந்துகளை இயக்குவதற்கு நடத்துநரோ அல்லது ஓட்டுநரோ இல்லாத பட்சத்தில் மற்றவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கட்டாய விடுப்பு வழங்கியது மட்டுமின்றி அந்நாளுக்கான ஊதியத்தையும் பிடித்தம் செய்வதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேருந்துகளை இயக்காமல் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
மேலும் ஆளுங்கட்சிக்கு என தனியாக தொழிற்சங்கம் இல்லாததால் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு முறையாக கொண்டு செல்ல முடியவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நீண்டநேர வாக்குவாதத்திற்கு பிறகு ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிமேல் இதுபோல் நடக்காது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால், ஐயப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக பேருந்துகள் இயங்கத்தொடங்கின. அதிகாலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு செல்லவிருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ”அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் கட்டாய விடுப்பு, சம்பளம் பிடிப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பாதது, பணச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர். இதேநிலை நீடித்தால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். இன்று அதிகாலை நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
