சென்னை: அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினந்தோறும் பல லட்சம் மக்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே உயர்தர சிகிச்சையை பெற்று வருகிறார்கள். அதே நேரம் ஒரு சில மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியிர்கள் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நேரத்தில் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
* தூய்மை பணியாளர்கள் உட்பட மருத்துவ சிகிச்சையளிக்க தகுதியற்ற நபர்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கை தீவிர படுத்தப்படும்.
* அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை கட்டாயம் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க பணிக்கு வருவது கட்டாயம்.
* உள் நோயாளிகள் பிரிவை கண்காணிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் இருக்க வேண்டும். மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் , மருத்துவ அதிகாரியான ஆர்.எம்.ஓ காலை 7 மணி முதல் மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
* மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேபோல், பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவது அவசியம்.
* மருத்துவப் படிப்போ அல்லது செவிலியர் பயிற்சியோ பெறாத தூய்மைப் பணியாளர்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவோ, ஊசி போடவோ அனுமதிக்கக் கூடாது.
* தகுதியற்ற நபர்கள் சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றமாகும் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
* மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் இருந்து கொண்டு சிகிச்சைக்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவதும் பணிக்கு வராமல் தூய்மை பணியாளர்களை முதலுதவி செய்ய வழி காட்டுவதும் தவறானது.
* நோயாளிகள் தரப்பில் புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துறை சார் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.
* நோயாளிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பாடு தொடர்பாக 104 என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
