திண்டிவனம்: தமிழக முதல்வர் விஜய் மூடுவதாக அறிவித்த டாஸ்மாக் கடைகள் திண்டிவனத்தில் ஜரூராக இயங்குவதால், தினமும் பாதிக்கப்படுவதாக பெண்கள் கொந்தளித்துள்ளனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களிலே பஸ் நிலையம், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு இடங்களில் மூடுவதாக அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டாஸ்மாக் கடை எண் (11444, 11459) ஆகிய 2 கடைகளை மூடுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. ஆனால் அங்கு தொடர்ந்து மது விற்பனை தற்போது வரையிலும் ஜரூராக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் திண்டிவனம் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையிலும், புதிய பேருந்து நிலையம் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள கடையிலும் வழக்கத்தைவிட மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் பெண்கள், பல்வேறு சிரமங்களை குடிமகன்களால் சந்திக்கும் நிலை உள்ளது.
இதுபற்றி டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டால், கடையில் இருக்கும் சரக்குகள் முழுமையாக விற்று தீர்ந்தவுடனே அந்த கடையை மூடி விடுவோம் எனத் தெரிவித்தனர். ஆனால் அங்கு சரக்கு குறைய குறைய மீண்டும் லாரிகளில் இரவோடு இரவாக மதுபாட்டில்கள் இறக்கி விற்பனை தொடர்வதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கலெக்டர் ஆபீசு முற்றுகை:
இதனிடையே விழுப்புரம் அருகே அன்னியூரில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்த ஆட்சியரிடம் போராட்டக்குழுவினர் மனு அளித்தனர். அதில், அன்னியூர் ஊராட்சியில் அனந்தபுரம் செல்லும் சாலையின் அருகில் தனியார் பள்ளியும், மாநில நெடுஞ்சாலையோரமாக டாஸ்மாக் கடையும் அமைந்துள்ளது. பள்ளிக்கு 250 மீட்டர் தூரத்தில் டாஸ்மாக் கடை இயங்குவதால் அடிக்கடி விபத்தும், பள்ளி செல்லும் மாணவர்கள் குடிபிரியர்களால் பெருத்த இன்னலுக்கும் ஆளாகியுள்ளனர்.
மேலும் அருகில் விவசாய நிலங்களும் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும், குடிபிரியர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அந்த வழியாக சென்றுவர முடியவில்லை. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் பிரதான மாநில சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெருத்த இன்னலுக்கு தினந்தோறும் ஆளாகின்றனர். தமிழக அரசின் எவ்வித வழிகாட்டு நெறிமுறைக்கும் பொருந்தாத இடத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். அதை மாவட்ட நிர்வாகம் பெற்றுக் கொண்ட நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்தகட்டமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
