1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை; பள்ளி கல்வித்துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ள நிலையில், பள்ளி கல்வித் துறையின் அவல நிலை மாற்றப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது. இந்த கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31ம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. எனவே, தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: