சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிப்பதற்கு, அவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பினால் மட்டுமே உரிய தீர்வை அடைய முடியும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்து முழுமை பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நாளில் கையெழுத்திடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையையே இதுவரை தொடங்கி வைக்க முடியாத தவெக அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
