வீரர்களின் இதய துடிப்பாக விராட் கோஹ்லி இருந்தார்: கோச் ஆண்டி ஃப்ளவர் பெருமிதம்

 

அகமதாபாத்: ஐபிஎல் 19வது சீசன் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, நேற்று முன்தினம் இரவு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இவ்வெற்றிக்கு பின், வீரர்கள் அறையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் பேசியதாவது: 2025, 2026 ஆகிய இரண்டு சீசன் வெற்றியிலும் வித்தியாசம் இருக்கிறது. கடந்தாண்டு முதன்முதலில் கோப்பையை வென்றபோது, ஒருவித பதற்றம் இருந்தது. ஆனால், இம்முறை வீரர்களின் மத்தியில் நல்ல நம்பிக்கை இருந்தது. அதை ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் வெளிபடுத்தினர்.

சவாலான போட்டிகளை சமாளித்து, வெற்றி பெற தெரிந்த அணியாக நாங்கள் இருந்தோம். இதற்கு முன் ஆர்சிபி அணியில் அனுபவ குறைபாடு இருந்தது. ஆனால் தற்போது, அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் நிறைந்த அணியாக மாற்றப்பட்டது, வெற்றியை வசப்படுத்தியுள்ளது. வீரர்களின் டிரசிங் ரூமில் விராட் கோஹ்லி மிக சகஜமாக இளம்வீரர்களிடம் பேசுவார். அவர், ஆர்சிபி வீரர்களின் இதய துடிப்பாக இருந்தார். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உற்சாக மூட்டும் வகையில் புவனேஸ்வர் குமார் செயல்பட்டார்.

அவரது பந்துவீச்சு திறன், அணியை வெற்றிக்கு அழைத்து வந்தது. கேப்டன் ரஜத்படிதார் அனுபவசாலியாக மாறி வந்திருக்கிறார்,’’ என்றார். முன்னதாக வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோஹ்லி கூறுகையில், “நான் இந்த தொடரின் ஆரம்பத்திலே சீசனில் சிறந்த அணியாக நாம் தான் இருக்கிறோம் என்று கூறினேன். லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டோம் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீரர்கள் இடையே பலதரப்பட்ட திறமை இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. உண்மையிலேயே இது சிறந்த ஒரு செயல்பாடு தான்.

மும்பைக்கு எதிராக பெற்ற வெற்றி எங்களுடைய நம்பிக்கையை மீண்டும் அதிகமாக்கியது. இந்த கோப்பைக்காக பல ஆண்டுகள் காத்திருந்தோம். இந்த அணியில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அனைத்து போட்டிகளிலும் ஒருவரே வெற்றிக்காக போராட வேண்டும் என்று நிலை கிடையாது. நமக்கு பின்னால் இருப்பவரும் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை இருந்தது. தொடரில் ஆட்டநாயகன் விருதை பல வீரர்கள் வென்று இருந்தனர். பந்து வீச்சிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

இந்த அணியை நினைத்து மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இறுதிபோட்டி நடந்த இந்த அகமதாபாத், குஜராத் அணிக்கு ஹோம் கிரண்ட்டாக இருக்கலாம். ஆனால், மைதானம் முழுவதும் ஆர்சிபி ரசிகர்கள் இருந்து, எங்களது ஹோம் கிரண்ட்டாக மாற்றி இருந்தனர். அனைத்து ரசிகர்களுக்கு நன்றி,’’ என்றார்.

Related Stories: