அகமதாபாத்: 19வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் டைட்டன்ஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 155 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து, 2வது முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி வரை களத்தில் இருந்த விராட் கோஹ்லி 75 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டதுடன், ஆட்டநாயகன் விருதை வென்றார். அடுத்தடுத்து கோப்பையை தக்க வைத்த 3வது அணி என்ற சிறப்பை ஆர்சிபி அணி பெற்றுள்ளது. வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தி, வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் ரஜத்படிதார் கூறுகையில், “இது அற்புதம். நாங்கள் இங்கு வந்தபோது கடந்த ஆண்டு நினைவுகள் நிறைய இருந்தன. ஆனால், அதே நேரத்தில், நாங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். இந்த வெற்றியை சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் நான் நன்றாக உணர்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், நான் ஆர்சிபிக்கு கேப்டனாக கோப்பையை வெல்வேன் என ஒருபோதும் கனவு கண்டதில்லை. இது அனைத்தும் விதிப்படி நடந்ததாக நினைக்கிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இம்முறை சற்று அதிக நம்பிக்கையுடன் இருந்தோம்.
நாங்கள் சென்ற ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்கள் ஆதரவு மகிழ்ச்சி அளித்தது. அது எங்களுக்கு உள்ளூர் மைதானம் போலவே இருந்தது. கோஹ்லியை நான் களத்திலும், வெளியிலும் பார்க்கும்போதெல்லாம், அவர் எப்போதும் அணிக்காகவும், வீரர்களுக்காகவும் இருக்கிறார். குறிப்பாக புதிய வீரர்கள் பேசத் தயங்கும் போது, அவரே நேராகச் சென்று பேசுவார். இது மிகவும் அற்புதம். ஆர்சிபி ரசிகர்களே, இந்த வெற்றி மீண்டும் உங்களுக்கானது. ஈ சலானு கப் நம்மது’’ என்றார்.
தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன்கில் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். 180-190 ரன் எடுத்திருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆடுகளம் சற்று மந்தமாக இருந்தாலும், விளையாடக் கடினமாக இல்லை. பவர் பிளேயில் 1, 2 விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும் என நம்பினோம். ஆனால் அங்கு 15-20 ரன் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்துள்ளது’’ என்றார்.
2026 தொடரின் சாதனைகள்
* மொத்த ரன் 27,450
* மொத்த பவுண்டரி 2,332
* மொத்த சிக்சர் 1,426
* சதங்கள் 15
* 200 பிளஸ் ரன் 65 முறை
* 200 பிளஸ் ரன் சேசிங் 17 முறை
