×

தட்டாஞ்சாவடி, முதல்வர் தொகுதியில் நான் போட்டியிட்டதால் ஓட்டுக்கு ரூ.6,500 மக்களுக்கு கிடைத்தது: வைத்திலிங்கம் ‘ஓபன் டாக்’

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட்டார். இதனால் இந்த தொகுதியில் அனைவரின் பார்வையும் திரும்பியது. தேர்தல் முடிவில் ரங்கசாமி மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மற்றும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு பேசியதாவது:
2021ம் ஆண்டு தேர்தலில் ரங்கசாமிக்கு 12 ஆயிரம் ஓட்டு கிடைத்தது. ஆனால் 2026ம் ஆண்டு 10,020 ஓட்டுக்கள் தான் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 2100 ஓட்டுகள் குறைவாகத்தான் கிடைத்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி நண்பர்கள் சிலர் என்னிடம், உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கு இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.6,500 கிடைத்தது. நீங்கள் இங்கு போட்டியிட வராவிட்டால் கிடைத்திருக்காது என கூறினர். தட்டாஞ்சாவடி மக்கள் தோற்கடித்து விடுவார்களோ என்ற பயத்தில் தேர்தலுக்கு காசே தராதவர் இந்த முறை தந்துள்ளார். எனது கணிப்பு இந்த தேர்தலில் என்.ஆர். தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் ரூ.20 கோடி செலவு செய்திருப்பார்.

ஆனாலும் அவர் வாங்கியது 10 ஆயிரம் ஓட்டுக்கள்தான். எதிர்ப்பு ஓட்டுக்கள் 12,500 விழுந்துள்ளது. அவர் பெற்ற ஓட்டைவிட எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகம். தற்போது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, மங்கலம் தொகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் தட்டாஞ்சாவடி மக்கள் என்ஆர் மீது கோபமாக உள்ளனர். ஓட்டுக்கு ரூ.6,500 கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் வெளிப்படையாக பேசி இருப்பது தற்போது புதுச்சேரியில் பேசும் பொருளாகவும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.

Tags : Dhattanchawadi ,Vaithilingam ,Puducherry ,Rangasamy ,Dattanchavadi ,Assembly elections ,Congress party ,
× RELATED மணலி சிபிசிஎல் சந்திப்பில் சாலையோரம்...