ராஜஸ்தானை வீழ்த்தி 3வது முறையாக இறுதிபோட்டிக்கு தகுதி; பைனலிலும் எங்கள் அணி இதேபோல் அசத்தும்: குஜராத் கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை

 

நியூசண்டிகர்: ஐபிஎல் தொடரில் நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 47 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 96 ரன் விளாசினார். ஜடேஜா நாட் அவுட்டாக 45, டோனோவன் ஃபெரைரா 11 பந்தில் 38 ரன் அடித்தனர். குஜராத் பவுலிங்கில் ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 215 ரன் இலக்கை துரத்திய குஜராத் அணியில் கேப்டன் கில்-சாய் சுதர்சன் முதல் விக்கெட்டிற்கு 167 ரன் சேர்த்தனர்.

சாய்சுதர்சன் 32 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன் எடுத்து கடந்த ஆட்டம் போல் ஹிட்விக்கெட் ஆனார். ஐபிஎல்லில் 5வது சதம் விளாசிய கில் 53 பந்தில் 15 பவுண்டரி, 3 சிக்சருடன் 104 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 18.4ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வதுமுறையாக பைனலுக்குள் நுழைந்தது. கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின்னர் அவர் கூறியதாவது: “டாஸ் போடும் போது சில குழப்பங்கள் நிலவின. மேட்ச் ரெஃப்ரிக்கு ரியான் பராகின் அழைப்பு சரியாக கேட்கவில்லை. எது எப்படியோ, இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

சுதர்சனுடனான பார்ட்னர்ஷிப் குறித்த கேள்விக்கு,” எங்களுக்குள் தகவல் தொடர்பு மிக அருமையாக இருக்கும். எந்த பந்துவீச்சாளரை யார் குறிவைத்து அதிரடி காட்ட வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அதைத் தீர்மானிப்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். தொடர்ந்து 2 போட்டிகளில்(சுதர்சன்) இப்படி ஹிட்-விக்கெட் அவுட் ஆவதை நான் இதுவரை பார்த்ததே இல்லை, யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். நான் இன்று ஒரு தனி உலகத்தில் இருந்ததாக உணர்கிறேன். பீல்டர் இடைவெளி மற்றும் பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் இருந்தது. 220 ரன் என்ற கடினமான இலக்கைத் துரத்தினோம்.

ஒரு கட்டத்தில் அவர்களை 180-190 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் பெரிய ஸ்கோரை எட்டினர். எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தவுடன், நானே போட்டியை முடித்து வைக்க வேண்டும் என பேசிக்கொண்டோம். ஆனால் நான் அவுட் ஆன விதம் எனக்கு சற்று வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம். கடைசி வரை பேட்டிங் செய்யக்கூடிய ஆழமான வரிசையும் உள்ளது. இப்போது ஃபைனலில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படுவதே முக்கியம். இறுதிப்போட்டியிலும் எங்கள் அணி இதேபோல் அசத்தும் என்று நம்புகிறேன், என்றார்.

சொந்த மைதானத்தில் பைனலில் ஆடுவது பற்றி பேசிய கில்,“நிச்சயமாக இது ஒரு சிறந்த உணர்வு. போட்டிகளுக்கு நடுவில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது. மிகவும் வேகமான சூழல். எனவே நாளை நாங்கள் அனைவரும் நன்றாக ஓய்வெடுத்து மீண்டு வருவோம், என்றார். நாளை அகமதாபாத்தில் நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியன் ஆர்சிபியுடன் குஜராத் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

400 பந்துகளில் ஆயிரம் ரன் இளம்புயல் சூர்யவன்ஷி
* ஐபிஎல்லில் சூர்யவன்ஷி 440 பந்துகளில் ஆயிரம் ரன் இலக்கை தொட்டார். இதற்கு முன் ரஸ்சல் 545 பந்துகளில் ஆயிரம் ரன் அடித்திருந்தார்.
* தனது 23வது இன்னிங்சில் ஆயிரம் ரன்னை எட்டினார். ஷான் மார்ஷ் 21 இன்னிங்கில் இந்த இலக்கை எட்டி டாப்பில் உள்ளார்.
* நடப்பு சீசனில் அவர் 72 சிக்சர், 63 பவுண்டரி என 135 முறை பந்தை எல்லைகோட்டிற்கு விரட்டி உள்ளார். இதற்கு முன் 2022ல் பட்லர் 83 பவுண்டரி, 45 சிக்சர் என 128 முறை பந்தை எல்லைகோட்டிற்கு அடித்திருந்தார்.
* கடந்த 4 இன்னிங்சில் 3 முறை 90 பிளஸ் ரன்னில் அவுட் ஆகி உள்ளார்.

சூர்யவன்ஷி நாட்டிற்கு ஆடி பெருமை சேர்க்க வேண்டும்!
தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது: “215 ரன் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல ஸ்கோர் தான். ஆனால், 2வது இன்னிங்ஸில் ஹெவி ரோலர் பயன்படுத்தியதால் பிட்ச் பேட் செய்ய சற்று சாதகமாக மாறிவிட்டது. 230-240 ரன் எடுத்திருந்தால் இந்த சேஸிங் மிகவும் கடினமாக இருந்திருக்கும். குஜராத் அணியின் பலமான பேட்டிங் வரிசையை வீழ்த்த முதலிலேயே விக்கெட்எடுத்திருக்கவேண்டும். பல நேர்மறையான விஷயங்களுடன் இந்த சீசன் எங்களுக்கு மிகவும் நன்றாகவே அமைந்திருக்கிறது. உண்மையில் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்றே யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

சூர்யவன்ஷியின் ஆட்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றி ரன் அடிப்பது ஒரு வகை. ஆனால் சூர்யவன்ஷி ஆடிய விதம் அப்படிப்பட்டது அல்ல. மிகச் சரியாக கணக்கு போட்டு, பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை கணித்து விளையாடுகிறார். விரைவில் நாட்டிற்கு ஆடி பெருமை சேர்க்க வேண்டும். அதேபோல், ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து ஆடி, 2வது கோப்பையை வென்று தர வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.

Related Stories: