கில்கில்: கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவிகள் அச்சத்தில், அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.
மளமளவென பற்றிய தீ விடுதி முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் மாணவிகள் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி விட்டனர். படுகாயமடைந்த 79 மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
