வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக தங்கி ஆய்வு செய்வதற்கான பிரமாண்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காக நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க நாசா முடிவு செய்துள்ளது. இதனை 3 கட்டங்களாக நிறைவு செய்வதற்கான புதிய திட்டத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆய்வு மையம் 3 கட்டமாக அமைத்து முடிக்கப்படும் என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.
நிலவின் அபாயகரமான சூழலில் வாழ்வதற்கும் செயல்படுவதற்கும் தேவையான திறன்களை கற்றுக்கொள்ள உதவும் சோதனைகளை மேற்கொள்வதற்காக நிலவு ரோவர்கள், டிரோன்களுடன் கூடிய வகையில் இந்த நிரந்தர ஆய்வு மையம் அமைக்கப்படும் என ஐசக்மேன் தெரிவித்துள்ளார். 2028ம் ஆண்டில் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்குவதை நாசா நோக்கமாக கொண்டுள்ளது. அதற்கு முன்பாக தேவையான உபகரணங்களுடன் கூடிய இந்த நிரந்தர ஆய்வு மையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
