சென்னை: காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரது சந்திப்பை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக முதல்வர் விஜய் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு மிரட்டல் விடுத்ததே இந்த சந்திப்பு ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.
தனிப்பெரும்பான்மைக்கான கிடைக்காததால் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதனால் மைனாரிட்டி அரசாக தமிழகத்தில் தவெக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலில் ஈடுபடுகிறது என்று எதிர்க்கட்சிகளால் கடும் கண்டனத்துக்குள்ளானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். மொத்தம் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. அப்போது முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் சில கோரிக்கைகளையும் அளித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்தார்.
நெதர்லாந்தில் இருந்து செப்பேடுகளை பெற்றதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது. அப்போது நிதி சார்ந்த விஷயங்கள் குறித்து சில கோரிக்கைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த டெல்லி பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டார்.
ஆனாலும் அமித்ஷா, முதல்வர் விஜய்க்கு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் நேற்று அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியானது. ஆனால் நேற்றும் விஜய்யை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் முதல் ஆளாக ஓடிச் சென்று விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது. மேலும், அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி ஏற்படுத்தி கொள்வதாகவும் கூறியது. இதை தொடர்ந்து, முதல்வர் விஜய் பதவி ஏற்பு விழாவில் ராகுல்காந்தி நேரில் வந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் காங்கிரஸ் நெருக்கம் காட்டி வருகிறது. இதன் காரணமாகவே அமித்ஷா, முதல்வர் விஜய் நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை என்ற பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அந்த சந்திப்பை புறக்கணித்திருப்பது தெரிய வந்துள்ளது. ‘வேறு வேலைகள் உள்ளது’ என்று உள்துறை அமைச்சகம் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்தது.
ஆனால் குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதல்வர் வி.டி.சதீசனை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பை அமித்ஷா திட்டமிட்டே புறக்கணித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் முதல்வர் விஜய் நேற்று காலை சந்திக்க இருந்தார்.
10 ஜன்பத் இல்லத்தில் சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இதனால் 10 ஜன்பத் இல்லத்தின் வெளியே ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. அதேநேரத்தில் நேற்று காலை ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் சோமநாதன், முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். அப்போது, ஒன்றிய அரசு விஜய் அரசு மீது மன வருத்தம் கொண்டுள்ளதாக சில தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக தலைவர்களான விஜய், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மீது வருமான வரித்துறை, சிபிஐ வழக்குகள் உள்ளன. இதை எல்லாம் ஞாபகப்படுத்தி அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்கள் இழுக்கப்படுவது குறித்து ஆதாரமான பல தகவல்களை ஒன்றிய அரசு திரட்டி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை சந்தின்போது சோமநாதன் ஞாபகப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது
இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில், சோனியா, ராகுல் ஆகியோரை சந்திக்கும் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்த போதும், நேற்று தமிழகம் திரும்பும் போதும் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனும் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் திடீரென ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கேரள முதல்வர் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் விஜய்க்கு முறைப்படி அழைப்பு விடுத்தும் அவர் அந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
காங்கிரசை ஓரங்கட்டும் வகையில் விஜய்யின் அடுத்தடுத்த புறக்கணிப்பு தமிழக காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மாற்றம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதால் விஜய்யை இன்று சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் வட்டார தரப்பில் ஆறுதல் கூறினாலும், அதன் பின்னணியில் பாஜவின் திருவிளையாடல் உள்ளது என்ற சந்தேகம் காங்கிரசார் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்க செல்வது பாஜவுக்கு பிடிக்காததால் தான், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னை சந்திக்க விரும்பியவருக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு முதல்வர் விஜய் அவசர அவசரமாக சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியாகாந்தி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அவரை விஜய் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது டெல்லி சென்றபோதெல்லாம் சோனியா, ராகுல் காந்தியை சந்திப்பதை வழக்கமாக கொண்டார். குறிப்பாக சோனியா காந்தியை தனது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து, அவரை சந்தித்து நலம் விசாரித்து விட்டுத்தான் வருவார். ஆனால் கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள விஜய், சோனியாவை சந்திக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம் தோல்வி ஏன்?
பிரதமர் மோடி, விஜய்யை சந்தித்தது வெறும் 10 நிமிடம் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரள மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வரை சந்திக்கும் அதே நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை சந்தித்து இருக்கிறார்.
அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு நடக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் முதன்முதலாக டெல்லி வருகிறார். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதன்முறை.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்த திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள். ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை.
