பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறினர்: ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்

 

சென்னை: தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று காலை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர். ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை இன்று காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் திருநாளையொட்டி பள்ளி வாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.சென்னையில் பிராட்வே டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உரையாற்றினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக அரண்மனைக்காரரன் தெரு பின்னி கார் பார்க்கிங் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறப்புத் தொழுகையிலும் பங்கேற்றனர். அதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் பேசியதாவது: இஸ்லாமியர்கள் குர்பானி எனும் அடிப்படையில் பிராணிகளை பலியிட்டு ஏழைகளுக்கும் ஒரு பங்கை வழங்க இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய பாஜக அரசின் மூலமாகவும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கெதிராக பேசும் முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப்பினர்கள் எந்த விதமான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாவதாக தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில். இஸ்லாமியர்கள், இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையை கடைபிடிப்பதோடு தங்களின் சமூகநிலையை மாற்றுவதற்கு தன்னலமில்லாத சேவையாற்ற வேண்டும்” என்றார்.

பின்னர் அப்துர் ரஹீம் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும். பல்லாண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை உரிய சட்ட நடைமுறைகளுக்குட்பட்டு விடுதலை செய்ய வேண்டும்” என்றார். தொழுகைக்குப்பிறகு திடலை அழகிய முறையில் தூய்மைப்படுத்தினர். இது போன்று தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழவேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினர்.

தொழுகையை முடித்து கொண்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இது மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று மட்டன், சிக்கன் பிரியாணியை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.

Related Stories: