258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சென்னை, ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

 

சென்னை: 258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சென்னை, ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வுத்துறை (DRI) ஏற்கனவே தாக்கல் செய்திருந்த இரண்டு வெவ்வேறு வழக்குகளின் அடிப்படையில், இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்ட (PMLA) விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. கடந்த 2024 மார்ச் 5-ஆம் தேதி அதிகாலையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வருவாய் புலனாய்வுப் பிரிவினரும் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற ஒரு நாட்டுப் படகை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்தப் படகிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற, சர்வதேசச் சந்தையில் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 கிலோ கிராம் ‘ஹாஷிஷ்’ (Hashish) வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை முதல் மதுரை வரை செல்லும் ரயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், மதுரை ரயில் நிலையத்தில் பிலோமின் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் தீவிரச் சோதனைக்கு உள்ளாக்கினர்.

அவரிடமிருந்து சர்வதேசச் சந்தையில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 37.645 கிலோ கிராம் ‘மெத்தம்பேட்டமைன்’ (Methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு பெரும் கடத்தல் சம்பவங்கள் குறித்து அமலாக்கத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தச் சர்வதேசக் கடத்தல் வலைப்பின்னலுக்கு ஜான் பிரிட்டோ என்பவரே மூளையாகச் செயல்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories: