காக்களூர் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

 

திருவள்ளூர்: காக்களூர் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கும் நிலையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருவள்ளூர் நகராட்சி, காக்களூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி அமைந்துள்ளது. இந்த காக்களூர் ஏறி 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளமும் 4 மதகுகள், 2 கலங்கள்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த, ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்.

இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது. கடந்த வருடம் இந்த ஏரியில் மேம்பாட்டு பணி, ஊரக வளர்ச்சி துறை மற்றும் `நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ், ரூ.2.51 கோடி மதிப்பில் நடைபாதை, இரும்பு தடுப்பு, பார்வையாளர்களுக்கான பூங்கா உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து காக்களூர் ஏரியில் கொட்டுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால் ஏரியில் கலக்கிறது. இதனால் காக்கலூர் ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்துவிட்டது. மேலும், கடந்த ஆண்டு பெய்த மழையால் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், தற்போது மீன்கள் செத்து கரையோரம் மிதக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரையோர பகுதிகளில் இந்த மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், ஏரியில் நடை பயிற்சிக்காக வருபவர்களுக்கும் மற்றும் களைப்பாற வருகைத் தரும் பொதுமக்களுக்கும் கடும் துர்நாற்றம் காரணமாக கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரிக்குள் கலக்காதவாரும், பல்வேறு இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும், என்று பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

Related Stories: