மதுரை: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கத்திலுள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உயர்கல்வி கல்லூரி சேர்க்கை கவுன்சலிங் தொடர்பாக ஜூன் 3ம் தேதிக்குள் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மருத்துவம் மற்றும் பொறியியல் தேர்வுகளில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு தொழில்நுட்பம் தான் காரணம்.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசவிருக்கிறேன். இது தொடர்பாக முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருக்கிறோம். பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே, வேந்தர் என்பது முந்தைய திமுக அரசின் நிலைப்பாடு. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை ரீதியான முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். கடந்த அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது.
எங்கள் அரசு அமைந்த பிறகு முதலமைச்சர், கண்டிப்பாக உயர் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலை நெறிமுறைபடுத்துவார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வரும். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி கருத்தை முரண்பட்டதாக பார்க்கிறேன். அதேசமயம் மாணிக்கம் தாகூர் கருத்தை வரவேற்கிறேன்.
ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சியின் எம்எல்ஏ, தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்திக்கப் போகிறார். அவர் எம்எல்சியாக வரப்போவதில்லை. ராஜ்யசபாவிலோ வரப்போவதில்லை. மீண்டும் மக்களிடம் தான் செல்லப் போகிறார். மீண்டும் மக்கள் தங்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு வர விரும்புகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமாக இல்லை. என்னை பொறுத்தமட்டிலும் இதனை குதிரை பேரமாக கருதவில்லை இவ்வாறு தெரிவித்தார்.
* காவிரியில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது
‘‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக் கூட அனுமதிக்க மாட்டோம். மேகதாது அணை பிரச்னையில் முதலமைச்சர் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்’’ என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.
