மேற்குவங்கத்தில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் திரிணாமுல் கட்சியின் 100 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: அபிஷேக்கின் 17 சொத்துக்களை இடிக்க நோட்டீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜகவிடம் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு மம்தா பானர்ஜியால் தொடங்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடந்த மேற்கு வங்காள தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு பொறுப்பேற்றது. புதிய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் கடந்தகால செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதால், திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் நடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும், கடந்த 23ம் தேதி தெற்கு டம்டம் பகுதியின் முக்கிய கவுன்சிலர் சஞ்சய் தாஸ் சந்தேகத்திற்குரிய முறையில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாக, பட்பாரா நகராட்சியின் 35 கவுன்சிலர்களில் தலைவர் ரேபா ரஹா உட்பட 30 பேரும், ஹலிசஹார் நகராட்சியின் 23 பேரில் 16 பேரும், காஞ்ச்ராபாராவில் 14 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். கொல்கத்தா மாநகராட்சியிலும் நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு சொந்தமான 17 சொத்துக்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதால், மேயர் பிர்ஹாத் ஹக்கீம் தனது பதவியை ராஜினாமா செய்ய பரிசீலித்து வருகிறார். கடந்த 22ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தின் போது அரங்கம் பூட்டப்பட்டதால், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் வெளியிலேயே அமர்ந்து கூட்டத்தை நடத்த வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டது.

மறுபுறம், கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்த பரசாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதர் தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஐ-பேக் என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தை மம்தா பானர்ஜி நம்பியதே கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், பாஜகவைச் சேர்ந்த முதல்வர் சுவேந்து அதிகாரி நடத்திய அரசு நிர்வாகக் கூட்டத்திலும் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நேரில் பங்கேற்றார். சமீபத்தில் நடந்த திரிணாமுல் கட்சியின் முதல் பெரிய போராட்டத்தில் 80 எம்.எல்.ஏ.க்களில் 36 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்த நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிட தகுந்த வேட்பாளர் கிடைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் தவித்து வருகிறது. மேற்குவங்கத்தில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில், திரிணாமுல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா மீது வழக்கு
கடந்த 2025ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ரெட் ரோட்டில் நடைபெற்ற ஈத் விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை விமர்சிக்கும் நோக்கில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர், ‘ஜும்லா கட்சி’ என்று பாஜகவை சாடியதோடு, அவர்கள் பின்பற்றும் மதத்தை ‘கண்டா தர்மம்’ (அழுக்கான மதம்) என்று குறிப்பிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ரிங்கி சாட்டர்ஜி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது சிலிகுரி காவல் நிலையத்தில் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: