விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராம குவாரிகளில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு 26.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, குவாரிகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அனுமதி ஆவணங்கள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். மேலும், குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள், உடல் நல பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு, அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
அத்துடன், பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் குவாரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இ.கா.ப., , மதுரை மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் லோ.சட்டநாதன் சங்கர் , விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர், முனைவர்.சி.சுகதாரஹிமா , புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி புவியியலாளர் கோ.வெங்கடேஷ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
