அனுமதி பெறாமல் வைத்த பேனர்களை அகற்ற வேண்டும்

 

பரமத்திவேலுார், மே 26: பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல், சேலம், கரூர், ஜேடர்பாளையம் செல்லும் நான்குரோடு பகுதி, சிவா தியேட்டர் கார்னர், நான்கு ரோடு, சுல்தான்பேட்டையில் முக்கோண பூங்கா, மோகனூர் சாலை, பரமத்திவேலூர் பேருந்து நிலையம் எதிரே, அண்ணா சிலை, காமராஜர் சிலை அருகே சாலையை ஆக்கிரமித்து அனுமதியின்றி பல்வேறு வகையான விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், இவ்விடத்தில் இருசக்கர வாகனங்கள் எதிர்புறம் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

அதிக அளவில் அரசியல் கட்சி விளம்பர பிளக்ஸ் பேனர்கள், வர்த்தக விளம்பரம், கடை திறப்பு விழா முடிந்தும் அப்புறப்படுத்தாமல் பல நாட்களாக அப்படியே விட்டுள்ளனர். தற்போது, காற்று பலமாக வீசுவதால் அடிக்கடி பிளக்ஸ் பேனர்கள் சாலையில் விழுந்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. விபரீதம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அதன்பின் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் அகற்ற உத்தரவிட்டது. ஆனால் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.

எனவே, விபத்து நேரிடும் முன்பு, பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது, போலீசாரிடம் அனுமதி பெற்று பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர் என தெரிவித்தார். இதுக்கு குறித்து போலீசாரிடம் கேட்ட போது, எங்களிடம் பிளக்ஸ் பேனர்களை வைக்க அனுமதி கடிதம் வரவில்லை. எந்த பேனர்களும் வைக்க நாங்கள் அனுமதி தரவில்லை என்றனர்.

Related Stories: