22 தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை

 

நாமக்கல், மே 23: நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 22 தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 237 தனியார் பள்ளிகள், அரசு அனுமதியுடன் செயல்படுகிறது. இந்த 22 பள்ளிகள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அனுமதியின்றி செயல்படுவது கட்டாய கல்வி உரிமை சட்டம், மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டங்களுக்கு எதிரானது ஆகும். எனவே, இப்பள்ளிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

துவக்க அனுமதிபெற போதிய கால அவகாசம் வழங்கப்பட்டும். துவக்க அனுமதிபெற இதுவரை கருத்துருக்கள் முழு வடிவில் பெறப்படவில்லை. எனவே, மாணவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியற்ற தன்மை ஏற்படுவதால் 2026-2027ம் கல்வியாண்டு முதல், எக்காரணம் கொண்டும், இந்த பள்ளிகள் செயல்படக் கூடாது. எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை எந்தவொரு வகுப்பிலும் மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாது என சம்பந்தப்பட்ட தாளாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மாறாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளி செயல்படும் பட்சத்தில், உரிய சட்ட விதிகளின்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்களின் குழந்தைகளை சேர்க்க வேண்டும். மேலும் இது தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), 04286-293981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவேண்டும். அனுமதி பெறாமல் செயல்படும் 22 பள்ளிகளின் பெயர்கள் விபரம் வருமாறு: டைம் கிட்ஸ், இளம் மழலையர் பள்ளி, காவேரி நகர், நாமக்கல். ஏபிசி கிட்ஸ், இளம் மழலையர் பள்ளி, நாமக்கல், ஹனி பனி கிட்ஸ், இளம் மழலையர் பள்ளி, எஸ்.பி.புதூர், நாமக்கல். ஆரஞ்சு அகடெமி, இளம் மழலையர் பள்ளி, நாமக்கல், சன் பிளவர் இளம் மழலையர் பள்ளி, நாமக்கல்.

அக்ஸரம் மழலையர், இளம் மழலையர் பள்ளி, நாமக்கல். ஸ்பார்க்கில் அகாடமி, இளம் மழலையர் பள்ளி, நாமக்கல், யூரோ கிட்ஸ், இளம் மழலையர் பள்ளி, நாமக்கல், 9 ஸ்மைலிஸ் வித்யாஷ்ரம் எஸ்.எஸ்.எஸ் இளம் மழலையர் பள்ளி, செல்லப்பம்பட்டி, மகிழம் இளம் மழலையர் பள்ளி, எஸ்.பி புதூர், நாமக்கல், துளிர் இளம் மழலையர் பள்ளி. நாமக்கல், ஸ்கூல் ஆஃப் மாண்டசரி சேம்போ, நாமக்கல்.

ஆல்பபெட்ஸ் பிரி ஸ்கூல், இளம் மழலையர் பள்ளி, நாமக்கல். தீக்ஷா விசனரி பள்ளி, நல்லிப்பாளையம், துலிப் கார்டன் நர்சரி மற்றும் பிரைமரி, குப்பநாயக்கனூர், ஆப்பிள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பொத்தனூர், காவேரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, எருமப்பட்டி, கோல்டன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பள்ளிபாளையம், கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பள்ளிப்பாளையம், எவர்கிரீன் இண்டர்நேசனல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஆலாங்காடு, எஸ்.எம்.எஸ். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பவித்ரம், காந்தி சி.பி.எஸ்.சி பள்ளி, ந.கந்தம்பாளையம், பரமத்திவேலூர் ஆகிய பள்ளிகள் அனுமதி பெறவில்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: