நிச்சயதார்த்தம் முடிந்த 5 நாட்களில் பெண் இன்ஜினியர் கொலை: உடலை கால்வாயில் வீசி எறிந்த காதலன்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் ஷிவானி சிங் (22). இவருக்கு கடந்த 14ம் தேதி பிரகாஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி அலுவலகம் செல்வதாக கூறிவிட்டு சென்ற ஷிவானி வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் உத்ரேடியா ரயில் நிலையம் அருகே ஷிவானியின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. வழக்கு குறித்து ஏடிசிபி வசந்த் குமார் கூறுகையில், ‘சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததில், ஷிவானி கடைசியாக பிரேம் குமார் மஞ்சி (23) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஷிவானியும் பிரேமும் காதலித்து வந்த நிலையில், ஷிவானியின் நிச்சயதார்த்தம் பிரேமிற்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17ம் தேதி இரவு ரயில் நிலையம் அருகே உள்ள தனிமையான பகுதிக்கு வருமாறு ஷிவானியை பிரேம் அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரப்பர் குழாயால் ஷிவானியை பிரேம் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் உடலை புதரில் இழுத்துச் சென்று, தலையை கல்லால் நசுக்கி கொலை செய்துள்ளார். ஆதாரங்களை அழிக்க ஷிவானியின் செல்போனை கால்வாயில் வீசியுள்ளார்’ என்று தெரிவித்தார். பிரேம் குமார் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: