நெல்லை: பாளையங்கோட்டையில் 20 வயது வாலிபருடனான உறவை கைவிட மறுத்ததால் 34 வயது வங்கி பெண் மேலாளர் மகள் கண்முன் ஓடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை (34). பாளையில் அரசுடமை வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வங்கி தேர்வுக்காக ஒரே மையத்தில் படித்த போது காதலித்து சங்கர் (36) என்பவரை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு 7 வயதில் மகள் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுக்கு முன் சங்கர் ஐதராபாத்திலுள்ள அரசு வங்கிக்கு மாறுதல் பெற்று சென்றார். பின்னர் விவாகரத்து பெற்ற சங்கர், ஆந்திராவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். முத்துமாலை மகளுடன் சென்னல்பட்டியிலுள்ள பெற்றோர் வீட்டில் தங்கி பாளையிலுள்ள வங்கிக்கு தினமும் பஸ்சில் சென்றார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாளை தியாகராஜநகர் பகுதியில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மொபட்டில் முத்துமாலை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். தப்பி ஓடியவரை விரட்டிச் சென்று வீட்டு வாசலில் மகள் கண் முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: முத்துமாலை சென்னல்பட்டியிலுள்ள பெற்றோர் வீட்டில் குடியிருந்த போது, அதே பகுதியிலுள்ள சித்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கு தங்கி வேலை செய்த லாரி டிரைவரான நாங்குநேரி அருகே ஆழ்வாநேரியை சேர்ந்த இசக்கிபாண்டிக்கும் (20) முத்துமாலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை முத்துமாலையின் பெற்றோர் மற்றும் சித்தியின் குடும்பத்தினர் கண்டித்தனர்.
ஆனாலும் அந்த வாலிபருடனான பழக்கத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி பன்னீர்செல்வம், நண்பர் சிவாவுடன் சேர்ந்து முத்துமாலையை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இதற்கிடையே முத்துமாலையை கடந்த ஒரு வாரமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்த சித்தி மகன் இசக்கிபாண்டியை (32) போலீசார் நேற்று கைது செய்தனர். முத்துமாலையின் தம்பி பன்னீர்செல்வம், அவரது நண்பர் சிவா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
