கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: சிறுவனை எரித்துக்கொன்று மணலில் புதைத்த கொடூரம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே சிறுவனை எரித்துக்கொன்று சாக்கில் அடைத்து ஆற்று மணலில் புதைத்த கொடூர கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் நாய்கள் அதிகளவில் குரைத்ததோடு ஒரு சாக்குமூட்டையை இழுத்தபடி இருந்தன. இதைப்பார்த்த சிறுவர்கள் அங்கு சென்றபோது நாய்கள் ஓடிவிட்டன. சாக்குமூட்டையில் மனித உடல் ஒன்று எரிந்து சிதைந்த நிலையில் காணப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நள்ளிரவில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடலை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுவனின் உடலில் மண்டை ஓடு மேல் பகுதி காணாமல் போயுள்ளது. இதனால் நரபலி ஏதேனும் கொடுப்பதற்காக சிறுவன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டானா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஒத்த வயது உடைய நபர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா என்று கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்தபோது அவ்வாறு யாரும் மாயமாகவில்லை என்றும் தெரியவந்தது. எனவே வெளியூரில் கொலை செய்து பிணத்தை இங்கு வந்து எரித்து சாக்குமூட்டையில் அடைத்து ஆற்றில் புதைத்தார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆற்றுக்கு போகக்கூடிய கிராமங்களில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் இறந்த நேரம் தெரியவரும். அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்தால் சிறுவன் யார்? கொலையாளிகள் யார்? மண்டை ஓடு ஒரு பகுதி மாயமானதால் நரபலி கொடுக்கப்பட்டானா? என்ற விபரங்கள் கிடைக்கலாம் என் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: