சென்னை: தமிழ்நாடு அரசில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக கட்சி தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருடன், 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் விஜய் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபித்தார். தவெக தனக்கு தேவையான அளவு பெரும்பான்மையில்லாமல், மைனாரிட்டியாக இருப்பதால் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இயூமுலீ மற்றும் அதிமுகவின் ஒரு பிரிவினரை இழுத்து மெஜாரிட்டி நிரூபித்துள்ளார்.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியினரை குதிரை பேரம் மூலம் உடைத்து, தங்களுக்கு அமைச்சரவையில் 6 இடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்து, 25 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதுதான் விஜய் தெரிவித்த தூய ஆட்சியா? என்று சமூகவலைதளங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்றபோது நியமிக்கப்பட்ட 9 அமைச்சர்களுக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது? மற்றும் முதல்வர் விஜய் என்னென்ன இலாகா தன்வசம் வைத்துள்ளார் என்பது குறித்து ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. 9 அமைச்சர்களுக்கும் கோட்டையில் தனி அறை மற்றும் கார் உள்ளிட்ட அமைச்சருக்கு வழங்கப்படும் எல்லா சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இலாகா என தெரியாததால் அமைச்சர்களும் தலைமை செயலகத்துக்கும், சொந்த ஊருக்கும் அரசு காரில் பயணம் செய்து சுத்தி வருகிறார்கள். அவர்களது பணி என்ன என்று கூட தெரியாமல் வந்து செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு முதலமைச்சர் விஜய்க்கு பொதுத்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், பெண்கள் நலன், இளைஞர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், உள்ளாட்சி, நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கீடு
ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி, நீர்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு
அமைச்சர் அருண்ராஜுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கீடு
விஜய் அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு
அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுத்துறை ஒதுக்கீடு
நிர்மல்குமாருக்கு மின்சாரம், சட்டம், சிறைத்துறை, நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு, சட்டமன்றம், தேர்தல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு
இயற்கை வளங்கள் துறை அமைச்சராக டி.கே.பிரபு நியமிக்கப்பட்டு உள்ளார்
ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
