நீட்டை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் தி.க. ஆர்ப்பாட்டம்: திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்பு

 

சென்னை: நீட்டை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது. கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது.

எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் கலி பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விசிக தலைவர் திருமாவளவன், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக அரசியல் ஆய்வு மய்யம் செயலாளர் ஆவடி அந்திரி தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், மமக துணை பொதுச்செயலாளர் யாக்கூப், எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் போது நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 

Related Stories: