செங்குன்றம் காவல் சோதனை சாவடியில் பறிமுதல் வாகனங்களால் விஷ ஜந்துகள் நடமாட்டம்: காவலர்கள் அவதி

 

புழல்: செங்குன்றம் காவல் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் பாம்பு, விஷப்பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் காவலர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே சென்னை – கொல்கத்தா தேசிய சாலையில் செங்குன்றம் காவல் சோதனைசாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், தொடர்ந்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில், ஆந்திரா மாநிலத்திலிருந்து கார் மற்றும் லாரி மோட்டார் சைக்கிள்களில் தொடர்ந்து பலமுறை செம்மரக்கட்டைகள், கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது.

இவ்வாறு, கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இச்சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டு செம்மரக்கட்டைகள், கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும், சிலர் கைது செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், சாலையின் ஓரங்களில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இதில் பாம்புகள், விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. தற்போது கோடை வெயிலில் காரணமாக பாம்பு, விஷப்பூச்சுகள் அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில் சில நேரங்களில் தஞ்சமடைகிறது.

இதனால், இங்கே பணியாற்றும் காவலர்களும், குறிப்பாக இரவு நேரங்களில் பணிபுரியும் காவலர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றம் உத்தரவு பெற்று பொது ஏலத்தில் விட தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இப்பகுதியில் வாகனங்கள் இல்லாமல் உருவாகுவதுடன் காவலர்களும் பயமின்றி பணியாற்ற கூடிய சூழ்நிலையும் உருவாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: