தவெக அணியில் அதிமுகவை சேர்க்க காங்கிரஸ் எதிர்ப்பு

 

கோவை: தவெக அணியில் அதிமுகவை சேர்க்க கூடாது என காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும், பாஜவின் மதவாத சக்திக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாற்றத்தை வேண்டி வாக்களித்து, தவெகவுக்கு வெற்றியை தந்துள்ளார்கள். விஜய் முதல்வராக பதவி ஏற்றவுடன், ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து, ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளார். அதேசமயம், அதிமுக கடந்த பத்து ஆண்டுகளாக பாஜவுடன் கூட்டணி சேர்ந்து, தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, வழக்குகளை சந்தித்துள்ளனர். சிலர், பாஜ தலைமையுடன் நெருக்கம் காட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி அமைய முனைப்பு காட்டினர். இப்படி இருக்கையில், அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோரை, விஜய் நேரில் சந்தித்தது 1.72 கோடி வாக்காளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயல், தவெக தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒருவித விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, அதிமுகவினரை தவெக கூட்டணியில் சேர்க்க கூடாது. அமைச்சர் பதவி எதுவும் வழங்க கூடாது. ஊழலற்ற ஆட்சியை அமைப்பதில் தவெக உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Related Stories: