புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- 12, பாஜ 4, அதிமுக- 1, லஜக- 1 தேஜ கூட்டணி 18 இடங்களை வெற்றிப்பெற்று தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று காலை நடந்தது. வந்தே மாதிரம் பாடல், தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. காலை 9.47 மணிக்கு கடவுளின் பெயரால் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து பாஜவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் கடவுளின் பெயரால் உறுதிமொழி கூறி அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் மல்லாடி கிருஷ்ணராவ் அவரது தாய் மொழியான தெலுங்கில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 10.04 மணிக்கு விழா நிறைவு அடைந்தது. பிறகு முதல்வர், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டவர்களுக்கு, எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்வர், அமைச்சர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
