தூத்துக்குடி: தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி கேரள மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மூலம் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் நுழைந்து கடந்த சில நாட்களாக மீன்பிடித்து வருவதாகப் புகார் எழுந்தது. நேற்று இரவு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு சென்று கண்காணித்த போது கேரள மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பின் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
எல்லை தாண்டி மீன்பிடித்த 16 கேரள மீனவர்களிடமும் பாதுகாப்புப் படை போலீசாரும் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடைக்காலத்தில் அண்டை மாநில மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த இந்த சம்பவம் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
