கோடையில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.5.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விரிவான ஆய்விற்குப் பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் திரு. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு. பி. பொன்னையா, இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு. பிரதீப் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) திரு. ஆனந்த்மோகன், இ.ஆ.ப., மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: