மறு ஜென்மம் எடுத்தது போல் உணர்ந்தோம்!

நன்றி குங்குமம் தோழி

உலகையே உலுக்கியது மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்குள் தள்ளி இருக்கிறது ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர். இந்தப் போரினால் வளைகுடா நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவித பிரச்னை இல்லாமல் இருந்த வளைகுடா நாடுகளில் போரினால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பல ஆண்டுகளாக வேலைக்காக மற்ற நாடுகளை சேர்ந்த மக்கள் அங்கு குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், இந்தப் போர் அவர்களுக்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக கணவர் மற்றும் மகன்களுடன் பக்ரைனில் வசித்து வந்துள்ளார் பிரவீணா. பதட்டமான சூழ்நிலையிலும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்து பயந்துவிடாமல் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்று சென்னைக்கு திரும்பியுள்ளார். கோடம்பாக்கத்தில் தன் கணவரின் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தவர், அவர் அங்கு சந்தித்த பதட்டமான சூழ்நிலையினை பகிர்ந்தார்.

*ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை துவங்கியது எப்போது உங்களுக்கு தெரிந்தது?

போர் தாக்குதல் இருக்கும் என்று பக்ரைன் அரசிற்கு ஒரு மாதம் முன்பே உறுதியாக தெரிந்துவிட்டது. போர் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு முன்கூட்டியே அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் பாதுகாப்பான தரைத்தள பேஸ்மென்ட் இடங்கள் குறித்த தகவல்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டது. சைரன் ஒலி ஒலித்தால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையினை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

போர் என்ற வார்த்தையைதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது எப்படி இருக்கும் என்று யாரும் உணர்ந்தது இல்லை. அமைதியான, நிம்மதியான சூழலில் வாழ்ந்து வந்த வளைகுடா நாடுகள் குறிப்பாக பக்ரைன் மக்கள் அரசின் எச்சரிக்கையை முதலில் பெரிதாக நினைக்கவில்லை. இங்கு யார் தாக்குவார்கள் என்று அசால்டாக இருந்தோம்.

என் கணவர் பக்ரைனில் கடந்த இருபது ஆண்டுகளாக எண்ணெய் வள நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். என் இரு மகன்களும் அங்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘செகயா’ என்ற இடத்தில் எட்டு மாடிக் குடியிருப்பில் தான் நாங்க இயல்பான வாழ்க்கையினை வாழ்ந்து வந்தோம். நான் சென்னையில் வசிக்கும் வரை பிரபல பள்ளியில் நிர்வாக பணியில் இருந்தேன். அங்கு சென்ற பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் வேலைக்கு போகவில்லை.

2026 புத்தாண்டு குதூகலமாக துவங்கியது. பிப்ரவரி 28ம் தேதி விடுமுறை என்பதால் நாங்க அனைவரும் வீட்டில் இருந்தோம். அந்த சமயம் வானில் பயங்கர சப்தம் கேட்டது. பயத்தில் நடுநடுங்கிவிட்டோம். என்ன நடக்கிறது என்று மொட்டை மாடிக்கு சென்று பார்க்க நினைத்தோம். ஆனால், செல்போனில் அபாய சைரன் அடித்ததும் டி.வியினை போட்டு பார்த்த போதுதான் ஈரான்- அமெரிக்க இடையே போர் துவங்கிய கெட்ட செய்தி தெரியவந்தது. எங்க குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். எல்லோரும் பாதுகாப்பாக தரைத்தளத்திற்கு சென்றுவிட்டோம்.‘அச்சமில்லை… அச்சமில்லை… அச்சம் என்பதில்லையே…’ வீரமுழக்கத்தை நானும் என் தோழிகள் அனைவரும் சேர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தோம்.

*பக்ரைனில் எந்தப் பகுதி தாக்கப்பட்டது?

எங்கள் குடியிருப்பிற்கு அருகில்தான் அமெரிக்க கப்பல் தளம் இருந்தது. அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எங்களுக்கு மிக அருகில்தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. அதன் மீது தாக்குதல் வந்தால் நாங்களும் பாதிப்பு அடையலாம். அதனால் எங்க குடியிருப்பில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் கணவரின் அலுவலக கெஸ்ட் ஹவுசில் சென்று பாதுகாப்பாக தங்கலாம் என்று திட்டத்துடன் தேவைப்படும் உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் கிளம்பி சென்றோம்.

அலுவலகம் வர இரண்டு கிலோமீட்டர் இருந்தபோது எங்கள் காரின் இடப்பக்கமிருந்து வலதுபக்கம் மூன்று ஏவுகணைகள் ‘சர் சர்’ என்று பாய்ந்து சென்றதைப் பார்த்த போது நாங்க அனைவரும் நடு நடுங்கிப் போய்விட்டோம். பிறகு சமாளித்து தொடர்ந்த போது வானில் ஏவுகணைகள் செயல் இழக்க வைத்து துகள்கள் ஆகி கீழே விழுவதை பார்த்தோம். என்னதான் தைரியமாக இருந்தாலும் போர் ஒலிகள், வானை முட்டும் அளவு உயரும் புகைமூட்டங்கள் எப்படிப்பட்ட தைரியசாலியாக இருந்தாலும் பயப்பட வைத்துவிடும்.

*சென்னை திரும்ப காரணம்?

நாங்க சென்னைக்கு வருட விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். எங்க இருவரின் பெற்றோரும் இங்குதான் வசிக்கிறார்கள். அங்கு போர் தொடர்ந்தாலும் என் கணவர் அலுவலகம் சென்று கொண்டுதான் இருந்தார். பிள்ளைக்கு மட்டும் விடுமுறை அளித்திருந்தார்கள். பகலில் ட்ரோன், ஏவுகணை வானில் சீறிப் பாயும் காட்சிகளை பார்க்கும் போது அதிலிருந்து விழும் துகள்கள் எங்கள் மீது விழுந்துவிடுமோ என்று பயத்தில்தான் இருந்தோம். இரவிலும் நிம்மதியாக தூங்க முடியாது. போர் சப்தங்கள் வானில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் பயந்து வாழ வேண்டாம்.

போர் அச்சம் நீங்கும் வரை சென்னையில் இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டு இங்கு கிளம்பி வந்தோம். நாங்க சென்னைக்கு வந்ததே த்ரிலிங்கான சம்பவம்தான். இந்தியன் கிளப் மற்றும் பாரதி தமிழ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிளைட்டில் சவுதி அரேபியா விமான நிலையத்தில் இருந்து 193 பயணிகளுடன் கிளம்பினோம். சாதாரணமாக பக்ரைனில் இருந்து சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்துவிடலாம். ஆனால், போர் காரணமாக பக்ரைன் விமான நிலையம் மூடப்பட்டதால் சாலை வழிப் பயணம் செய்து சவுதிக்கு வந்தோம். அங்கிருந்து விமானத்தில் 22 மணி நேரம் பயணித்து சென்னைக்கு வந்தோம்.

வான்வெளியில் ட்ரோன், ஏவுகணை தாக்குதலுக்கு எங்கள் விமானமும் சிக்கி விடுமோ என்ற டென்ஷன் எங்க எல்லோருக்கும் இருந்தது. இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் தைரியம் சொல்லிக் கொண்டு பயணித்தோம். விமானத்தை இயக்கிய விமானி சூழ்நிலை உணர்ந்து பத்து நிமிடத்திலே முப்பதாயிரம் அடி உயரத்திற்கு விமானத்தை செலுத்தி அசர வைத்துவிட்டார். எந்த போர் தாக்குதலும் நாங்கள் பயணம் செய்த விமானம் சந்திக்கக் கூடாது என்று பயணிகள் அனைவரும் நாங்கள் உட்பட குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டே சென்னை வந்தடைந்தோம். கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுத்தது போல் உணர்ந்தோம்.

*திரும்ப பக்ரைன் செல்வது குறித்து…

வீட்டில் எல்லோரும் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும். போக வேண்டாம் என்கிறார்கள். இருபது ஆண்டுகள் பக்ரைனில் இருந்தது போதும்… நிம்மதியாக சொந்த ஊரில் சொந்த பந்தங்களோடு பெற்றோர்களோடு இருந்து கொண்டு சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. பக்ரைன் வாழ்க்கை பழகிவிட்டது. தற்போது உலக நாடுகள் தலையீட்டால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் போர் நின்றுவிடும். எல்லோரும் பழைய நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் மட்டும் அவசர பணிக் காரணமாக பக்ரைனுக்கு சென்றுவிட்டார். சூழல் சரியானதும் எங்களை வந்து அழைத்து செல்வார்’’ என்றார் பிரவீணா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

Related Stories: