பெண்களுக்கு அதிக முதலீட்டில் தயக்கமும் பயமும் இருக்கிறது!

நன்றி குங்குமம் தோழி

குடும்பத்தலைவிகளாக மட்டுமே வலம் வந்த பெண்கள் கல்வியால் ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர் என முன்னேறி வருகிறார்கள். சிலர் தொழில்முறை படிப்புகளையே விரும்பி தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ஆண்களைப் போல் வணிகம் கற்று தொழில் முனைவோர்களாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். உலக நாடுகளை போலவே இந்தியாவிலும் பெண் தொழில்முனைவோர்கள் வளர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் வணிகத்தில் பெண்களின் பங்கு கணிசமாக உயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவுகிறது.

புதுமையான யோசனைகள் மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகி சமூகத்தில் பாலின வேற்றுமை மறைந்து வருகிறது. பெண்களுக்கு தொழில் சார்ந்த ஐடியாக்களை இணையமும் சமூக வலைத்தளங்களும் அவ்வப்போது தந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை சிறந்த முறையில் பெண்கள் பயன்படுத்தி வெற்றியும் கண்டு வருகிறார்கள். அதே சமயம் குடும்ப பொறுப்புகளையும் அவர்கள் திறம்பட கவனித்துக் கொள்கிறார்கள். அதற்கு பெரிதும் கை கொடுப்பது ஆன்லைன் பிசினஸ். அதற்காக டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஈ-காமர்ஸ் போன்ற கோர்ஸ்களை தேடித்தேடி படிக்கின்றனர். விரும்பும் தொழிலை ஆன்லைனிலேயே செய்து வீட்டையும் உயர்த்தி தங்களையும் முன்னேற்றி வருகிறார்கள். ‘வீட்டிலேயே இருந்து பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு நாங்கள் எல்லா விதத்திலும் உதவி செய்கிறோம் என்கிறார் ‘ஷீ தி சக்தி’ என்ற ஈ காமர்ஸ் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் மற்றும் நிறுவனருமான மரியா சுபிராஜன்.

“திருநெல்வேலியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பிடெக் முடித்து எல்லாரையும் போல ஐ.டி துறையில் நுழைந்தால் சீக்கிரம் முன்னேறிவிடலாம் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்த பொண்ணு நான். எங்க வீட்டில் மூணு பொண்ணுங்க. அதனால பள்ளிக் காலத்திலேயே குடும்பத்துக்காக பார்ட் டைம் வேலைக்கு போவேன். கிராமத்தில் குடிசை தொழிலாக பலகாரங்கள் செய்வாங்க.

அங்கு மாவு அரைப்பது போன்ற வேலையும் ஸ்கூல் முடிஞ்சதும் கழனி வேலை, பூ பறிக்கிறதுனு வேலைக்குச் செல்வேன். கொஞ்ச நாள் ஃபிஸ்ஸிங் நெட் கம்பெனியில கூட கோடை விடுமுறையில் வேலைக்கு போனேன். நான் மட்டுமல்ல பெரும்பாலும் கிராமத்தில் இன்றும் பள்ளி மாணவிகளும் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படித்தான் என்னுடைய பிசினஸ் பார்வை தொடங்கியது’’ என்று தன் பள்ளிப் பருவ காலத்தின் உழைப்பை குறித்துப் பகிர்ந்தார்.

‘நான் அரசுப் பள்ளியில் தமிழ் மீடியம் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போதும் தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் வேலை பார்த்தேன். 2015ல் சாஃப்ட்வேர் துறையில் ஆண்ட்ராய்டு டெவலப்பராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களில் நுழைவது எப்படி? என் தகுதிகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்று எதுவுமே தெரியாது. கூடுதலாக திறன்கள் பற்றிய அறிவும் இல்லை. அதற்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கவில்லை. நான் படித்த காலத்தில் கல்லூரியிலும் மேம்பாட்டுத் திறன் சொல்லித் தரவில்லை. கேம்பஸ் நேர்காணல் எல்லாம் அப்போது கல்லூரியில் இல்லை. அதனால் சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் முட்டுக்கட்டாக இருந்தது’’ என்று ஐடி துறையில் தான் சந்தித்த சவால்கள் பற்றிக் கூறுகிறார் மரியா.

‘‘பல போராட்டங்களுக்கு மத்தியில் 2015ல் சென்னையில் புதியதாக தொடங்கப்பட்ட கம்பெனியில் ஆண்ட்ராய்டு டெவலப்பராக சேர்ந்தேன். அங்கு ப்ரஸ்ஸர்களை விற்பனை குறித்தும் பார்க்கச் சொன்னார்கள். புதிதாக ஆரம்பித்த கம்பெனி என்பதால் பலதரப்பட்ட வேலைகள் இருந்தன. எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே ஐ.டி துறையை விட விற்பனையில் எனக்கு ஆர்வம் அதிகமானதால், விற்பனை மற்றும் தொழில் மேம்பாட்டு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விற்பனையில் உள்ள அத்தனை உத்திகளையும் கற்றுக் கொண்டேன். வாடிக்கையாளர்களை அணுகுவது எளிதாக இருந்தது. நிறுவனத்தாருடன் நெருக்கம் கிடைத்தது. புதிய நிறுவனம் என்பதால் ஒரு நிறுவனம் இயங்க தேவையான அனைத்தும் நான் கற்றுக் கொண்டேன்’’ என்றவர், திருமணம் காரணமாக சிறிய இடைவெளி ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

‘‘திருமணம் என்பதால் நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு என்னால் சும்மா வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனக்கான அடையாளம் வேண்டும் என்பதால் ஃப்ரிலான்சிங் செய்ய தொடங்கினேன். 2017ல் திருமணத்திற்கு முன்பே கன்டென்ட் ரைட்டிங் எழுதி வந்தேன். திருமணத்திற்குப் பிறகு அதையே முழுவேலையாகத் தொடர்ந்தேன்.

உலகளவில் அமெரிக்கா, யூகே, நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள சில வாடிக்கையாளர்களை எடுத்து அவர்களுக்கு கன்டென்ட் ரைட்டிங் கொடுத்து வந்தேன். தற்போதைய டிஜிட்டல் காலத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஈ-காமர்ஸ் அதிகம் வளர்ந்துள்ளது. அது பற்றிய அறிவு வேண்டும் என்பதால் அதையும் கற்றுக் கொண்டேன். இதற்காக ஸ்டார்டப் நிறுவனம் ஒன்றில் ஈ-காமர்ஸ் குறித்து பயிற்சி பணியில் சேர்ந்தேன்’’ என்றவர், காலத்திற்கு ஏற்ப தன் திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

‘‘பயிற்சி பணியில் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே என்னுள் இருந்தது. ஒன்றரை வருடங்கள் அங்கு வேலை பார்த்தேன். பின் 2023ல் சொந்தமாக ‘பிராண்ட் பாக்ஸ் குளோபல்’ என்ற பெயரில் ஈ- காமர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆன்லைன் விற்பனை தளங்களில் பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கு கணக்கு துவங்குதல் முதல் நிதி மேலாண்மை, விற்பனை உத்திகள் வழங்குவது வரை அனைத்து சேவைகளையும் செய்து தருகிறோம். உலகளவிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்தார்கள்.

உலகளவில் ஏழு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்சிஸ்க்கு மட்டுமில்லாமல் நிறுவனங்களுக்கும் சோர்சிங் செய்து தருகிறோம். இதன் மூலம் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் ெகாண்டேன். அதனைத் தொடர்ந்து சமூகத்திற்கு என்னால் முடிந்த சேவையினை கொடுக்க விரும்பினேன். 2024ல் ‘She the Sakthi’ என்று பெண்களுக்கான அமைப்பினை உருவாக்கினேன். அதில் என்னுடைய பிசினஸ் பயணத்தில் நான் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுத்தர துவங்கினேன்.

பொதுவாக பெண்களுக்கு தயக்கம் மற்றும் பயம்தான் பெரிய தடையாக இருக்கிறது. பெண் தொழில்முனைவோர்கள் திறமையாக செயல்பட்டாலும் உலகளவில் முன்னேற முடியாமல் இருக்க இதுதான் காரணம். அதற்கான பயிற்சியினை எங்கள் அமைப்பு சொல்லித்தருகிறது. மேலும், அரசு சார்ந்த தொழில்முனைவோர் பயிற்சிகளும் எடுக்கிறேன். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு புதிய ஐடியாக்களைத் தந்து அவர்களை ஈ காமர்ஸில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே எங்கள் அமைப்பு செயல்படுகிறது’’ என்றவர், தன்னுடன் சேர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் நபர்கள் பணியாற்றுவதாக கூறுகிறார்.

‘‘இன்று சமூகவலைத்தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில் பொருட்களும் பெண்களை மையப்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே போல பெண் ழில்முனைவோர்களும் பெருகி வருகின்றனர். பெண் தொழில்முனைவோரின் விருப்பம் உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், ஆடைகள் என்ற இந்த மூன்றைச் சார்ந்தே இருக்கிறது. முதலீடும் ரிஸ்க்கும் குறைவு என்பதாலயே பெண்கள் இத்துறைகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குடும்பத்தில் பெண்களை நம்பி முதலீடு செய்ய விரும்பாததும், பெண்களும் பயம் மற்றும் தயக்கத்தின் காரணமாக ஏஐ டெக்னாலஜி போன்ற அதிக முதலீடு சார்ந்த துறைகளில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ஆண்கள் சாதாரணமாக 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க எங்களிடம் வருகிறார்கள் என்றால் பெண்கள் பத்தாயிரம் முதலீட்டில் வருகிறார்கள். சிறிய தொழிலாக இருந்தாலும் சொந்த முதலீட்டையே பெரும்பாலும் பெண்கள் விரும்புகின்றனர். அவர்களை பிசினஸில் ஜொலிக்க வைக்க எல்லாவித உதவிகளையும் வழிமுறைகளையும் சொல்லித் தர எப்போதும் தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார் மரியா சுபிராஜன்.

தொகுப்பு: கலைச்செல்வி

Related Stories: