நன்றி குங்குமம் தோழி
1822ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மேரிலாந்தில் பிறந்த ஹாரியட் டப்மன் (Harriet Tubman) என்று அறியப்படுகிற அராமிண்டா ராஸ் என்பவரின் சிறுவயது வாழ்க்கை அடிமைத்தனத்தினால் நிறைந்திருந்தது. ஹேரியட் க்ரீன் ராஸ் மற்றும் பெஞ்சமின் ராஸ் தம்பதிக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளுள் ஒருவராக இருந்தார் டப்மன். இவரின் குடும்பத்தினர் அனைவருமே மேரிலாந்தில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
கறுப்பின மக்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்கிற இந்த அடிமைத்தன முறையில், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மனிதர்களாக பார்க்கப்படாமல் நிலம், கால்நடைகளை போல ஒரு உரிமையாளரின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்ட டப்மன் குடும்பத்தினர் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருந்தனர். இச்சூழலில், டப்மன் தன்னுடன் இருக்கும் ஒரு அடிமை தப்பிக்க முயற்சி செய்வதை கண்டார். விஷயம் அறிந்த அடிமைப்படுத்தும் ஆட்கள் அந்த தப்பிக்க முயன்றவரை தடுக்க அதிக எடையுள்ள பொருளை தூக்கியெறிந்ததில், அது துரதிர்ஷ்டவசமாக டப்மனின் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதன் தாக்கமும் வலியும் அவரின் வாழ்நாள் முழுதுவதும் பின்தொடர்ந்து தீவிர சிரமங்களுக்கு ஆளானதாக குறிப்பிடப்படுகிறது.
தானும் குடும்பமும் எப்படியாவது அடிமைத்தனத்திலிருந்து தப்பித்து சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற தீவிரமான முடிவை எடுத்தவர், 1849ம் ஆண்டு தப்பிக்கும் முயற்சியில் 100 மைல்கல் தூரம் பயணம் செய்து ஒருவழியாக அடிமைப்படுத்துபவர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றார். ஆனால், அங்கு அடிமைகளாக இருந்த தன் குடும்பத்தினரையும் மற்றவர்களையும் விட்டு தான் மட்டும் தப்பித்து வந்ததில் அதிருப்தி அடைந்தார். எப்படியாவது அவர்களை மீட்க வேண்டும் என்கிற தாகம் அவருக்குள் இருந்தது.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஹாரியட் டப்மன் யூனியன் படைகளுக்கு நர்ஸாகவும், உளவாளியாகவும், வழிகாட்டியாகவும் பணியாற்றினார். யூனியனுக்கு உதவ விரும்பிய அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ஆட்சேர்ப்பு செய்து, உளவாளிகள் குழுவை அமைத்தார். தென் கரோலினாவில் உள்ள கொம்பாஹீ ஆற்றங்கரைப் பண்ணைகளில் இருந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களை விடுவிப்பதற்கான ஒரு திடீர் தாக்குதலைத் திட்டமிட, கர்னல் ஜேம்ஸ் மாண்ட்கோமரிக்கு, டப்மன் உதவினார். 1863ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதி அதிகாலையில் டப்மன், பல நூறு வீரர்களுடன் மூன்று துப்பாக்கிப் படகுகளில் புறப்பட்டார்.
டப்மன் தனது உளவாளிகள் மூலம் கூட்டமைப்புப் படையினரின் நிலைகள் குறித்த முக்கியத் தகவல்களைச் சேகரித்திருந்தார். அவர்கள் கடற்கரையோரம் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதும், தண்ணீரில் எங்கெல்லாம் தானியங்கி வெடிப்பொருட்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். தெற்கின் மிக முக்கியமான சில நெல் வயல்களில் அதிகாலைப் பனிமூட்டம் விலகியபோது, யூனியன் படையினர் தாக்குதலை தொடங்கினர். கட்டிடங்களுக்குத் தீ வைத்தும், தோட்டங்களை எரித்தும் அடிமைப்படுத்துவோருக்கு பதட்டத்தை ஏற்படுத்தினர், இதனூடே டப்மன் தன் குடும்பத்தினர் உட்பட மற்ற அடிமைகளை மீட்கும் களப்பணியில் ஈடுபட்டார்.
சுமார் 15 முறை பயணம் செய்து அவர்களை வடக்கு நோக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார். இதற்காக மேற்கொண்ட அவரின் செயல் மிகவும் சவால் நிறைந்தது. ஆபத்து நிறைந்த அண்டர்கிரவுண்ட் ரயில் ரோடு எனப்படும் நிலத்தடி இருப்புப்பாதை வழியாக மக்களை பாதுகாப்பாகக் கொண்டு சென்றார். இவ்வாறு அங்கிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் என 70க்கும் மேற்பட்ட அடிமைகளை மீட்டார். இப்பெரும் நிகழ்வு ஒரு பெண் முன்னிலையில் நடத்தப்பட்ட முதல் ஆயுதப்படை நடவடிக்கையாக வரலாற்றில் இடம்பிடித்தது.
போருக்குப் பிறகும் அவரது போராட்டம் முடிவடையவில்லை. பெண்களின் வாக்குரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். சமூக நீதி, மனித உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. ஆபர்ன் நகரில் பக்கவாதம், வலிப்பு நோய், பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு பராமரிப்பு வழங்கும் ஒரு இல்லத்தை தொடங்கி நடத்தி வந்தார். வாக்குரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து, வாக்குரிமை போராளிகளுடன் இணைந்து பணியாற்றினார். பல்வேறு பெண்கள் உரிமை மாநாடுகளில் கலந்து கொண்டார். தனது இறுதி 25 ஆண்டுகளை தொண்டுப் பணிகளுக்காக அர்ப்பணித்தார்.
டப்மன் எதிர்கொண்ட சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் எடுத்த முடிவுகள், யுக்திகளை கையாண்ட முறை, போராட்ட குணம் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இன்று கூட, சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றி பேசப்படும் போது, ஹாரியட் டப்மனின் பெயர் வெளிப்படவே செய்கிறது. கடந்த 2024ம் ஆண்டு, நவம்பர் மாதம் அமெரிக்காவின் மேரிலாந்து மாநில ஆளுநரால், ஹாரியட் டப்மன் ‘அமெரிக்க வரலாற்றின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர்’ என்று அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
தொகுப்பு: ஆர்.ஆர்
