சென்னை: சென்னையில் திடீர் கன மழை காரணமாக, 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நடுவானில் வட்டமடித்தன. 10க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென செய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், நடுவானில் தத்தளித்துக் கொண்டு இருந்தன.
பெங்களூரு, மும்பையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உள்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானில் வட்டமிட்டன. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்தனர். அந்த விமானங்களை பெங்களூருக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான அகமதாபாத், டெல்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட 10 விமானங்கள் பலத்த மழை காரணமாக புறப்பட முடியாமல் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 15க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆலந்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. குறிப்பாக கிண்டி கத்திப்பாரா, பிரதான சாலை, சுரங்கப்பாதை, மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல் ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலை, கிண்டி ஜவகர்லால் நேரு சாலை போன்ற பகுதிகளிலும் வடிகால் வாயில் மழைநீர் செல்லாமல் தேங்கி நின்றது. நங்கநல்லூர், மணப்பாக்கம், முகலிவாக்கம், சண்முகாநகர், மதனந்தபுரம் போன்ற பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. இவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தாம்பரம்: சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், செம்பாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மழையினால் தாம்பரம் – ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி சாலை, தாம்பரம் – முடிச்சூர் சாலை, தாம்பரம் – தர்காஸ் சாலை, தாம்பரம் – திருநீர்மலை சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு நேற்று பெய்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். காற்றுடன் கூடிய மழை நேற்று பெய்த போது கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள அல்லாடி கிருஷ்ணசாமி தெருவில் மரம் ஒன்று அருகில் உள்ள மின் கம்பம் மேல் முறிந்து விழுந்தது.
இதில் மின் கம்பத்தில் இருந்து தீப்பொறியுடன் பயங்கர சத்தத்துடன் நெருப்புகள் வெளியேறியதால் அப்பகுதியில் மின்சார பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்க செய்து மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தொடர்ந்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தாமதமாக வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதுபோன்ற மழை நேரங்களில் மரங்கள், மரக்கிளைகள் சாய்ந்து மின் இணைப்பு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் அனைத்து பகுதிகளிலும் மின்கம்பம் அருகே உள்ள மரக்கிளைகளை முறையாக வெட்டி அகற்றி ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
