மாதவரம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 

மாதவரம்: மாதவரம் அருகே நெடுஞ்சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலரும் விபத்தில் சிக்குகின்றனர். சென்னை மாதவரம் 200 அடி சாலை-வடபெரும்பாக்கம் சாலையை இணைக்கும் குறுக்கு சாலை வழியாக தினமும் கன்டெய்னர் லாரி, மாநகர பேருந்து, கார், மோட்டார் பைக் என ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த பிரதான குறுக்கு சாலை நடுவில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு பழுதாகி ஆங்காங்கே குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் இந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறுகின்றனர்.

மேலும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் சக்கரங்கள் இறங்கினால் பழுதாகி நின்று விடும் என்பதற்காக சாலையில் ஓரமாக செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சிட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘அதிக அளவில் வாகனங்கள் செல்லக்கூடிய பிரதான குறுக்கு சாலையில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதோடு, இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.

இரவில் இந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த தம்பதி பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து சிராய்ப்புகள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தலையில் அடிபடாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் மட்டுமின்றி வடபெரும்பாக்கம் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: