தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை கட் ஆப் குறைகிறது: மாணவர்களுக்கு நல்ல செய்தி

 

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை கட் ஆப் குறையும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட 2 முதல் 4 மதிப்பெண் வரை குறையும் என்று கல்வி நிபுணர்கள் கணிக்கின்றனர். இது பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.

பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை வைத்து ஒரு மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவே கட் ஆப் மதிப்பெண் எனப்படும். கட் ஆப் அதிகமாக இருந்தால் நல்ல கல்லூரியில் நல்ல படிப்பில் சேரலாம். கட் ஆப் குறைந்தால் கடந்த ஆண்டை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் நல்ல கல்லூரியில் இடம் பெறலாம்.

இந்த ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் (சதம்) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது. நூறு மதிப்பெண் பெற்றவர்கள் குறைந்தால், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் கட் ஆப்பும் தானாகவே குறையும்.

அதாவது,இயற்பியலில் மட்டும் சதம் பெற்றவர்கள் 1,125 இருந்து 105 ஆக சரிந்துள்ளனர். அதாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு குறைவாக பெற்றனர். இது மிகப்பெரிய வித்தியாசம். அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கையில், இந்த ஆண்டு பிளஸ் 2 வினாத்தாள்களில் மனப்பாடம் செய்தால் மட்டும் விடையளிக்கக்கூடிய கேள்விகளை குறைத்து, யோசித்து புரிந்து விடையளிக்க வேண்டிய உயர் சிந்தனைத் திறன் கேள்விகளை அதிகமாக சேர்த்தனர் என்று தெரிவித்தனர். இதுவே சதம் பெற்றவர்கள் குறைய முக்கிய காரணம் என்று விளக்கினர்.

வேதியியல் ஆசிரியர் கூறுகையில், “வேதியியல் வினாத்தாளில் இதற்கு முன்பு திரும்பத் திரும்ப வந்த கேள்விகள் இந்த ஆண்டு மிகவும் குறைவாக இருந்தன. புரிந்து பயன்படுத்துவதற்கான கேள்விகளே அதிகமாக கேட்கப்பட்டன. இதனால்தான் நூறு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது” என்றார்.

இயற்பியல் ஆசிரியர் கூறுகையில், “வினாத்தாள் பொதுவாக எளிதாகத்தான் இருந்தது. ஆனால் பல தேர்வு வினாக்களில் இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் தந்திரமாக அமைந்திருந்தன. அவற்றை சரியாக விடையளித்த மாணவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர்” என்று தெரிவித்தார்.
இது குறித்து தொழில் வழிகாட்டி ஜெயபிரகாஷ் காந்தி தெரிவிக்கையில், ‘‘கடந்த ஆண்டு 195 அல்லது 196 மதிப்பெண் பெற்ற மாணவர் சேர்ந்த அதே கல்லூரியில், அதே படிப்பில் இந்த ஆண்டு 193 மதிப்பெண் பெற்ற மாணவரும் இடம் பெறலாம்.

அதாவது கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும் இந்த ஆண்டு நல்ல கல்லூரியில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.பொறியியல் மட்டுமின்றி கால்நடை மருத்துவம், மீனியல் போன்ற படிப்புகளுக்கான கட் ஆப்பும் 1 முதல் 3 மதிப்பெண் வரை குறையும் என்று கணிக்கப்படுகிறது. பிஎஸ்சி வேளாண்மை படிப்புக்கான கட் ஆப்பும் 2 முதல் 4 மதிப்பெண் வரை குறையலாம் என்று தெரிவித்தார்.

உயிரியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்றவர்களும் குறைந்துள்ளனர். தாவரவியலில் கடந்த ஆண்டு 269 பேர் சதம் பெற்றனர், இந்த ஆண்டு வெறும் 39 பேர் மட்டுமே பெற்றனர். விலங்கியலில் 36 இருந்தது 18 ஆக குறைந்தது.

மாணவர்களுக்கு சில முக்கியமான அறிவுரைகள் என்னவென்றால்,. TNEA இணையதளத்தில் (tneaonline.org) கடந்த ஆண்டுகளின் கட் ஆப் மதிப்பெண்களை கவனமாக ஒப்பிட்டுப் பார்த்த பிறகே கல்லூரி விருப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அவசரப்பட்டு விருப்பங்களை பதிவு செய்யாமல், ஒவ்வொரு கல்லூரியின் கட் ஆப் போக்கையும் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த ஆண்டு கட் ஆப் குறைவது, கடினமாக உழைத்தும் சில மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாக கவலைப்படும் மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: