டெல்லி: இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவர், மே 31-ஆம் தேதி முறைப்படி இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி மே 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையில் இவர் ஆற்றிய சிறப்பான மற்றும் நீண்டகால சேவையைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இவருக்கு இந்த உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இத்துடன் நாட்டின் ராணுவக் கட்டமைப்பில் மற்றொரு முக்கிய மாற்றமாக, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி (ஓய்வு) புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.
தற்போதைய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் வரும் மே 30, 2026 அன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். 11-வது கோர்க்கா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த அனில் சவுகான், செப்டம்பர் 30, 2022 முதல் நாட்டின் இரண்டாவது சி.டி.எஸ்-ஆகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
