சென்னை: ஆட்சி அமைக்க 116 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக விஜய் ஆளுநரைச் சந்தித்த நிலையில், பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் தவெகவை அழைக்காத நிலையில், தவெக ஆட்சி அமைக்கத் திணறி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடைபெற்றது. இதில், எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. அதேநேரம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில், திமுக மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் தலா 2 தொகுதிகள், தேமுதிக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 4, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்குக் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரினர். மேலும், 2 வாரங்களில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, 5ம் தேதி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினார். ஆனால், ஆளுநர் ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்களைக் கொடுத்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, விஜய் 6ம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆளுநரைச் சந்தித்து மீண்டும் வலியுறுத்தினார்.
அப்போதும் ஆளுநர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் விஜய் முதல்வராக ஆதரவு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெறத் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியது. இதில் காங்கிரஸ் கட்சி 5 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், மற்ற நான்கு கட்சிகளும் தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர். சில தினங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதாக அறிவித்தது. அதேநேரம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆலோசித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறவேண்டும், ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக மறைமுகமாக ஆள்வதைத் தடுக்கவேண்டும் என்பதால் வெளியில் இருந்து ஆதரவு தருவாதாக அறிவித்தனர். இதன்மூலம் தவெகவுக்கு மொத்தம் 116 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடத்துள்ளது.
அதேநேரம், தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐயூஎம்எல் தவெகவுக்கு ஆதரவு இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை விசிக உயர்நிலைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகததால் இன்னமும் தவெக ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இன்னமும் கிடைக்காத நிலை உள்ளது. இன்று காலை விசிக தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்கும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், நேற்று இரவு விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை குழுக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் கலந்து கொண்ட உயர்நிலை குழு கூட்டத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆகையால், அக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று எமது தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இதற்கிடையே ஊடகங்களில் இரு வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே ஒரு குழப்பத்தை விளைவிக்கும். அத்துடன் எமது கட்சியின் மீதான நன்மதிப்பையும் சீர்குலைக்கும் போக்காகும். ஆகவே நாளை(இன்று) காலை தலைவர் எமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் மீண்டும் நேற்று மாலை என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்களுடன் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து 116 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதோடு அமமுகவின் ஒரு எம்எல்ஏவான காமராஜ், தவெகவுக்கு ஆதரவு தருவதாக கூறி, அவரது கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் அளித்துள்ளதாகவும், அவருடன் சேர்த்து தனக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது உள்ளது. இதனால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அவர் தான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதையும் சேர்த்து தனக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்றும் ஆளுநரிடம் விஜய் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில், இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டது. ஆனால் திடீரென தன்னுடைய எம்எல்ஏவை விஜய் கடத்தியுள்ளதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன், நேற்று இரவு ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார். இதனால் பதவி ஏற்புக்கான அழைப்பிதழை உடனடியாக நிறுத்தும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
விழா ஏற்பாடுகளையும் நிறுத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமமுக எம்எல்ஏ கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததால், அவரது கடிதத்தை ஆளுநர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் தரப்பில் இருந்து விஜய் பதவியேற்க அழைப்பு வரவில்லை. இதனால், இன்று பதவியேற்பு விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆதரவு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியானதால் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள். ஆனால், அந்தத் தகவல் தவறானது என்று பிறகு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
