வாயில் துணியை வைத்து மகளை கொன்ற கொடூர தாய் கைது: பரபரப்பு வாக்குமூலம்

 

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பெற்ற மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் மனைவி சத்யா (30), இவருக்கு கடந்த 2015ல் கெங்கவரம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்று வர்ஷினி (10) என்ற மகள் இருந்தாள். முருகவேல் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சிறுமி வர்ஷினி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். வர்ஷினி பிறந்த பின், சத்யாவுக்கு 2 குழந்தைகள் பிறந்து உடல்நலம் பாதித்து இறந்துள்ளனர். சத்யாவிற்கும் அவரது கணவர் முருகவேலுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பள்ளி விடுமுறை விடப்பட்டதால் கடந்த மாதம் 18ம் தேதி சத்யா தனது தாய் வீடான கண்டாச்சிபுரத்திற்கு மகள் வர்ஷினியுடன் வந்து தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது மகளை மர்ம நபர்கள் நகைக்காக கொலை செய்து விட்டனர் என கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு சந்தேகத்தின்பேரில் 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் வர்ஷினியின் வாயில் துணி நூல்கள் இருந்ததை நிபுணர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார், வர்ஷினியின் தாய் சத்யாவிடம் தீவிர விசாரணை செய்ததில், எனக்கும் எனது கணவருக்கும் கடந்த பத்து வருடமாக குடும்ப சண்டை இருந்து வந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மகள் வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

அதன்பின்னர் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்ய சென்றபோது மகள் துடி துடித்து இறந்தது நினைவில் வந்து தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மகள் காதில் இருந்த கம்மல்களை கழற்றி அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டேன். மேலும் வீட்டில் மகளின் வளையல்களை உடைத்து போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் ஏற்பாடு செய்து விட்டு பக்கத்தில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மகளை தேடுவதுபோல் தேடி மற்றொரு வீட்டில் இருந்த மகளை யாரோ நகைக்காக கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தாய் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: