எஸ்.ஐயை சுட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு: திருச்செந்தூர் அருகே பரபரப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தின்போது ரவுடி துப்பாக்கியால் சுட்டதில் எஸ்ஐயும் காயமடைந்தார். தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல் (49). இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு ரவுடியான இவரை, பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மரிய அந்தோணி ஆக்னல், திருச்செந்தூர் அருகே சோனகன்விளை, காணியாளன்புதூரில் தோழி சந்தனமாரி வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான போலீசார், நேற்று மதியம் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது மரிய அந்தோணி ஆக்னல், நாட்டு துப்பாக்கியால் எஸ்ஐ ராஜபிரபுவை சுட்டுள்ளார். இதில் அவரது வயிற்றுப்பகுதியை குண்டு உரசிச் சென்றுள்ளது. இதையடுத்து எஸ்ஐ ராஜபிரபு துப்பாக்கியால் தற்காப்புக்காக சுட்டதில் மரிய அந்தோணியின் வலது மார்பிற்கும், வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்களை போலீசார் மீட்டனர். மேலும் காயமடைந்த எஸ்ஐ ராஜபிரபுவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை எஸ்பி மதன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னல், குற்ற வழக்குகள் தொடர்பான ‘சி’ பிளஸ் வகை ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இவர் மீது 2015 நவம்பர் 9ம் தேதி தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் வசித்த மனைவி ரொஷிட்டா மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கு உள்ளது. கடந்த 2023ல் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் மதன்குமார் என்ற வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் பாளையில் குடும்பத்தினருடன் இருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து செயின் பறித்த வழக்கும் உள்ளது. கடந்த மாதம் 12ம் தேதி தூத்துக்குடியில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் போலீசார் அவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

‘நர’ மாமிசம் சாப்பிட்டவர்
கடந்த 2023ம் ஆண்டு ஆலந்தலையில் மதன்குமார் என்ற வாலிபரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து துண்டு துண்டாக்கி கடற்கரையில் புதைத்து வைத்ததுடன், கொலை செய்யப்பட்ட வாலிபரின் ஈரலை எடுத்து தீயில் சுட்டு, கொடூரமான முறையில் இவர் நர மாமிசம் சாப்பிட்டதாக காவல்துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

3 முறை குண்டாஸ்
கடந்த 2023 ஆகஸ்ட் 3ம் தேதி தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் ஒரு தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரிய அந்ேதாணி ஆக்னல் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Related Stories: