நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (44). சின்னமனூர் நகர பாஜ தலைவர். அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி, வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகிறார். சின்னமனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான பெண். இவர், தனது தோழியுடன் கடந்த வாரம் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு சிங்கராஜின் நிதி நிறுவனத்திற்கு சென்றுள்ளார். சிங்கராஜ் இருவரையும் அமரவைத்து கடன் தொடர்பான நிபந்தனைகளை தெரிவித்தபோது, அப்பெண்ணின் தோழிக்கு போன் வரவே, அவர் நிதி நிறுவனத்தின் வெளிப்புறம் சென்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தை பயன்படுத்தி சிங்கராஜ், தனியாக அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண், சிங்கராஜை கீழே தள்ளி விட்டு, வெளியே ஓடி வந்து தோழியுடன் ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் கடந்த மே 5ம் தேதி அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பாஜ நிர்வாகியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண், சிங்கராஜிடம் ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றிருந்தார். வட்டியும், முதலுமாக செலுத்திய பிறகும், சில நாட்களுக்கு முன் சிங்கராஜ், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே சிங்கராஜை பதவியில் இருந்து நீக்குவதாக தேனி மாவட்ட பாஜ தலைவர் ராஜபாண்டியன் அறிவித்து உள்ளார்.

Related Stories: