பாலக்கோடு: தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவர் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து செய்து வந்த முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள பஞ்சப்பள்ளி அடுத்த பட்டாபி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (27) திருமணமாகாதவர்.
இவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஓசூர், காங்கேயம், சேலம் இரும்பாலை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் சத்தியமூர்த்தி மாயமாகினார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் ராணி இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சத்தியமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி மாலை சத்தியமூர்த்தி தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நண்பர்களை தொடர்பு கொண்டபோது 5 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் சத்தியமூர்த்தியின் நண்பரான நமாண்டஅள்ளியை சேர்ந்த பூதையன் (எ) வெள்ளையன் (27) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 1ம் தேதி மாலை சத்தியமூர்த்தி மற்றும் நண்பர்கள் 5 பேர் சேர்ந்து பஞ்சப்பள்ளி அருகே உள்ள வேடம்பட்டி வனப்பகுதியில், மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, சத்தியமூர்த்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை மரக்கட்டையால் தாக்கி, பாறையில் தலையை முட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி உயிரிழந்துள்ளதால் அனைவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த சத்தியமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்தியமூர்த்தியை நண்பர்கள் சேர்ந்து தொழில் போட்டியில் கொலை செய்தனரா? அல்லது பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கொள்ளையன், காதலிக்கும் ஜோடிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால் பஞ்சாயத்து செய்து காசு வாங்கி காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவாகரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
