போச்சம்பள்ளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்; போலீசார் விசாரணை

 

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் (50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள் (38). இவர் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு கோமதி என்ற மகளும், மணிகண்டன்(17) என்ற மகனும் உள்ளனர். இதில் கோமதிக்கு திருமணமாகி விட்டது. எப்போதும் காலையில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் சத்தியசீலன் இரவு 7மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். இதேபோல் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அதேபகுதியில் உள்ள சத்தியசீலனுக்கு சொந்தமான நிலத்தின் அருகேயுள்ள மற்றொரு நிலத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினர் மற்றும் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அப்பகுதி மக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு எஸ்பி தங்கதுரை, டிஎஸ்பி தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சத்தியசீலனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், நேற்று அவர் தனக்கு சொந்தமான நிலத்தை பார்க்க வந்தபோது இந்த கொலை நடந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச்சென்றது நின்றுவிட்டது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து முன்விரோதத்தில் சத்தியசீலன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடந்து வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: