சென்னை: தமிழகத்தில் ஊடாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டு இருப்பதால், 18 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதற்கிடையே சில மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. வேலூரில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், வளிமண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சிநிலை கொண்டுள்ளது. அதேபோல 0.9 கி மீ உயரத்தில் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென் மேற்கு மத்திய பிரதேசம் வரையில் உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். இதேநிலை 13ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
