×

முசிறி தவெக எம்எல்ஏ மீது ரூ.80 லட்சம் மோசடி புகார்: விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவு

 

திருச்சி: ரூ.80 லட்சம் பண மோசடி செய்ததாக தவெக எம்எல்ஏ மீது மாநகர கமிஷனரிடம் பெண் புகார் மனு கொடுத்துள்ளார். திருச்சி கே.கே.நகர் ரங்கா நகரை சேர்ந்த கற்பகநாதன் மனைவி லட்சுமி (41). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒரு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக, ஏற்கனவே இருந்த கட்டிடத்தை 2வது தளத்தில் வாடகைக்கு எடுத்தேன். அதை புதிதாக வடிவமைக்க திட்டமிட்டேன். இதற்காக லால்குடி ஆங்கரை பாலாஜி நகரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இன்ஜினியர் விக்னேஷ் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோரிடம் கடந்த 2025ல் ஒப்பந்தம் செய்தேன்.
ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தின்படி பணிகளை செய்யாமல் சில பணிகளை மட்டும் செய்து விட்டு பெரும்பாலான பணிகளை செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர்.

பணிகள் மேற்கொள்வதற்காக கொடுத்த ரூ.80 லட்சத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தனர். இதுதொடர்பாக கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது மறுத்து விட்டனர். மோசடி செய்த விக்னேஷ், தற்போது முசிறி தொகுதி தவெக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் நான் செலுத்திய பணம் மீண்டும் கிடைக்குமா என அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கொடுத்த பணத்தை எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கமிஷனர் உத்தரவின் பேரில் கே.கே.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Musiri ,Thaveka MLA ,Trichy ,Lakshmi ,Karpaganathan ,Ranga Nagar ,KK Nagar ,Municipal ,Commissioner… ,
× RELATED தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ்...