×

கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்பி, எம்எல்ஏவுக்கு போன் செய்து வறுத்தெடுத்த திமுக தொண்டர்: ஆடியோ உரையாடல் வைரல்

 

 

மயிலாடுதுறை: ‘கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா?’ என காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏவுக்கு போன் செய்து திமுக தொண்டர் வறுத்தெடுக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க தேவையான 11 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ள நிலையில் காங்கிரஸ் திடீரென தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள்ளே பெரும் விரிசலை ஏற்படுத்திய நிலையில் திமுக அலுவலகம் மற்றும் பொது இடங்களில் உள்ள காங்கிரஸ் பேனர்கள், சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர். கஷ்டப்பட்டு ஜெயிக்க வைத்த காங்கிரஸ், இப்போது எங்களை விட்டுவிட்டு மாற்று தலைமைக்கு ஆதரவு தருவதா என்பதே திமுக தொண்டர்களின் குமுறலாக உள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்த திமுக தொண்டர் மோதிரம் கணேசமூர்த்தி என்பவர், மயிலாடுதுறை எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ் ஆகிய இருவரையும் போனில் தொடர்பு கொண்டு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஆடியோ உரையாடல் பின்வருமாறு: எம்பி சுதாவை தொடர்பு கொண்ட கணேசமூர்த்தி, ‘‘ஹலோ மேடம், கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த உங்களை தொகுதி மக்களுக்கு தெரியாத நிலையிலும் இரவு , பகல் என பாராமல் அயராது உழைத்து ஜெயிக்க வைத்தோம். இப்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டீங்களே, இது உங்களுக்கு நியாயமா?…’’ என கேட்கிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய எம்பி சுதா, இதுதொடர்பாக நான் நேரில் வந்து உங்களிடம் பேசுகிறேன் என்று கூறி இணைப்பை துண்டிக்கிறார்.

இதனையடுத்து எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸை தொடர்பு கொண்ட கணேசமூர்த்தி, ‘‘இந்த தேர்தலில் உங்களை ஜெயிக்க வைப்பதற்காக திமுக தொண்டர்கள் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் எவ்வளவு உழைத்திருப்போம். திமுக தொண்டர்களின் ஒவ்வொரு உழைப்பையும் இவ்வளவு அசால்ட்டா நினைச்சுட்டு போயிட்டீங்களே’’ என கூறுகிறார்.
இதற்கு பதிலளித்த எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ், ‘‘இது நான் எடுத்த முடிவு இல்லை, கட்சித்தலைமை எடுத்த முடிவு. இதில் துரோகம் எல்லாம் எதுவும் இல்லை. நேரில் வரும்போது உங்களிடம் விரிவாக பேசுகிறேன்’’ என்று கூறி போனை துண்டிக்கிறார். திமுக தொண்டர் ஒருவர், காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ ஆகியோரிடம் பேசும் உரையாடல்கள் ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பக்கங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : DMK ,Congress ,MLA ,Mayiladuthurai ,Tamil Nadu Assembly ,
× RELATED தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ்...