காரியாபட்டி: காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுரு (52). விடுதலை சிறுத்தைகள் கட்சி காரியாபட்டி ஒன்றிய முன்னாள் துணைச்செயலாளர். இவர் நேற்று காலை குரண்டி கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதரில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென அவரது கண்களில் மிளகாய்ப்பொடியை தூவினர். நிலைகுலைந்த விஜயகுருவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விஜயகுரு உயிரிழந்தார். தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் ஆவியூர் போலீசார் விரைந்து வந்தனர். விஜயகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி நாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரண்டி பகுதியில் நடைபெற்று வந்த சமூக விரோத செயல்கள் குறித்து, விஜயகுரு காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஏப்.28ம் தேதி விஜயகுருவின் உறவினர் சக்திவேல், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சாவுக்கு விஜயகுருதான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினர்கள் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே விஜயகுரு, சமூக விரோதிகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டாரா அல்லது உறவினர் இறந்த சம்பவத்தில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விஜயகுரு படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
