சென்னை: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி என மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்றனர். சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முழு விசாரணைக்கு பிறகே முடிவெடுக்க முடியும் எனக் கூறி போனிகபூர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செங்கல்பட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக போனிகபூர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவி குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
