×

பாஜவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செக் கூடுதல் அமைச்சர் வேணும்னா 2 நியமன எம்எல்ஏ கொடுங்க…

 

புதுச்சேரி: அமைச்சரவையில் பாஜவுக்கு கூடுதல் இடம் தர வேண்டும் என்றால் என்.ஆர்.காங்கிரசுக்கு 2 நியமன எம்எல்ஏக்களை தர வேண்டும் என முதல்வர் ரங்கசாமி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்.ஆர் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் வென்ற பாஜவுக்கு 2 அமைச்சர், ஒரு சபாநாயகர் பதவியை முதல்வர் ரங்கசாமி வழங்கியிருந்த நிலையில், தற்போது 4 பேர் வெற்றி பெற்றிருப்பதால் அமைச்சரவையில் இடம் கொடுக்கலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தமுறை அக்கட்சிக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்க வேண்டுமென நிர்வாகிகள், நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் பாஜ கை காட்டும் நபருக்கு அமைச்சர் பதவியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்.ஆர் காங்கிரசில் சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமியும், பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை போலவே, ஒன்றிய அரசின் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி 3 நியமன எம்எல்ஏக்களை உடனே நியமிக்கவும் பாஜ தயாராகி வருவதாக தெரிகிறது. இதற்கிடையே பாஜ தலைவர் ராமலிங்கத்துக்கு, நியமன எம்எல்ஏ பதவியை வழங்கக்கோரி நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தை நிர்வாகிகள் மேலிடப்பொறுப்பாளரிடம் வழங்கியுள்ளனர். முதலியார்பேட்டை முன்னாள் எம்எல்ஏ உட்பட 3 பேரை நியமன எம்எல்ஏ ஆக நியமித்து அதற்கான உத்தரவை விரைவில் டெல்லி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் 2 அமைச்சர்கள், சபாநாயகர் பதவியை கேட்டு ரங்கசாமியிடம் பாஜ வலியுறுத்தி வருகிறது. ஆனால் ரங்கசாமி, ஒரு அமைச்சர் தர தயாராக இருப்பதாகவும், கூடுதலாக கேட்டால், 2 நியமன எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரசுக்கு தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து என்ஆர் காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘கடந்தமுறை போன்று பாஜகவுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் கொடுக்க வாய்ப்பில்ைல. சுயேட்சை, லஜக, நியமன எம்எல்ஏக்களை வைத்து அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது. இதில் ரங்கசாமி உறுதியாக உள்ளார். இதனால் அக்கட்சி, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அப்படி ஒரு அமைச்சர் கூடுதலாக கொடுக்க வேண்டுமானால், 3 நியமன எம்எல்ஏக்களில் 2 எம்எல்ஏ என்.ஆர் காங்கிரசுக்கு தர வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்கும் பாஜ இந்த முறை நியமன எம்எல்ஏ, ராஜ்யசபா ஆகியவற்றை தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மாநிலத்தில் பங்கு கேட்க தயாராக இருக்கும் பாஜ, ஒன்றியத்திலும், எங்களுக்கு பங்கு தரட்டும் என்பதே நிலைப்பாடு. இதற்கிடையே வருகிற 16ம்தேதி அமாவாசை. அதன்பிறகே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி கோவை வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்குசாமிகள், சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளார். புதுச்சேரி திரும்பியவுடன் துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,BJP ,NR Congress ,Puducherry… ,
× RELATED மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை...