×

பெண் வெட்டிக்கொலை பிசியோதெரபிஸ்ட் கைது: கோவை அருகே பயங்கரம்

 

தொண்டாமுத்தூர்: கோவை அருகே நல்லூர்வயல் பகுதியில் வீடு முன் குப்பை கொட்டிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாயை அவதூறாக பேசிய மூதாட்டியை வெட்டிக்கொன்ற பிசியோதெரபிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர். கோவை ஆலாந்துறை காருண்யா நகர் அருகே உள்ளது நல்லூர்வயல். இங்குள்ள சப்பாணிமடையை சேர்ந்தவர் ஜெசி (72). இவரது இளைய மகன் ஸ்டாலின். காருண்யா நகரில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். மூத்த மகன் கோவையில் தனியாக வசித்து வருகிறார். ஜெசி, வீட்டில் தனியாக தங்கி வந்தார். இவரது வீட்டின் அருகில் கடந்த ஒரு ஆண்டாக கன்னியாகுமரியை சேர்ந்த நோபிள் வாட்சன் (47) என்பவர் தனியாக வசித்து வந்தார். பிசியோதெரபிஸ்ட் மற்றும் பியூட்டீசியன் பணி செய்து வந்தார். திருமணமாகவில்லை. 2 அக்காள் உள்ளனர். இந்நிலையில் ஜெசிக்கும், நோபிள் வாட்சனுக்கும் இடையே வீட்டின் அருகில் குப்பை கொட்டுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு ஜெசி, நோபிள் வாட்சன் வீட்டின் முன்பு குப்பை கொட்டி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நோபிள்வாட்சன், ஜெசியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, இருவரும் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. அப்போது, நோபிள் வாட்சனின் தாய் குறித்து மூதாட்டி அவதூறாக பேசியுள்ளார். இதில் கோபமடைந்த நோபிள் வாட்சன், வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்துவந்து ஜெசியின் கழுத்தில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இத்தகவலறிந்து வந்த காருண்யா நகர் போலீசார், ஜெசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், நோபிள் வாட்சனை கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Thondamuthur ,Nallurvayal ,Karunya Nagar ,Alandur, Coimbatore.… ,
× RELATED மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை...